
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.
ஒரு நாள் தொடரில் பெற்ற வெற்றிக்கு பின்பு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதன் முதல் டி20 போட்டி மேற்று டிரினிடாட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து ரோகித் சர்மாவுடன், 'சர்பரைஸாக' சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட் ஆக, ரிஷப் 14 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். ஹர்திக் 1 ரன்னில் வெளியேற, பொறுப்பாக தனது அதிரடியை தொடர்ந்த கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதம் கடந்தார். 44 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 64 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா வெளியேறினார். ஜடேஜா 16 ரன்களில் பெவிலியன் திரும்ப, அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் பவுண்டரி மழை பொழிய துவங்கினார்.
19 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர், 4 பவுண்டரி விளாசி 41 ரன்களை குவித்தார் தினேஷ் கார்த்திக். இதனால் 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது இந்திய அணி. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் முதல் எதுவும் சரியாக அமையவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக ஷமாரா புரூக்ஸ் 20 ரன்களை எடுத்தார். முக்கிய பேட்ஸ்மேன்களான நிகோலஸ் பூரண், ஹெட்மயர், பாவல் எவருமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை மட்டுமே சேரத்து தோல்வியடைந்தது.
இந்திய அணியில் அஷ்வின், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.