Published : 29,Jul 2022 07:05 PM

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான புகாரை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

Madras-High-Court-has-quashed-the-complaint-filed-by-actor-Mahagandhi-against-actor-Vijay-Sethupathi-in-the-Saidapet-court-for-assaulting-him-at-the-Bengaluru-airport

பெங்களூரூ விமான நிலையத்தில் தன்னை தாக்கியதாக நடிகர் மகாகாந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அளித்த புகாரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக 2020 நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

விஜய் சேதுபதி மற்றும் ஜான்சன் மீது வழக்குப் பதிவு செய்யவும், மூன்று கோடி ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டுமென சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.  இந்நிலையில் சம்மனை வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.

image

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விஜய் சேதுபதி தரப்பில், பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத் தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி சத்திகுமார் சுகுமார குரூப், தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரிய புகாரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபதி, ஜான்சன் மீது மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 39 பள்ளி மாணவர்களுக்கு ஒரே ஊசி - நர்சிங் மாணவர் கைது

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்