Published : 29,Jul 2022 04:02 PM
சினிமா பாணியில் ஒரு சேஸிங்! கால்நடைகளை கடத்திய லாரியை மடக்கி பிடித்த போலீஸ்!

ஹரியானாவில் கால்நடை கடத்தலில் ஈடுபட்ட லாரியை காவல்துறையினர் சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கி 4 பேரைக் கைது செய்தனர். குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த துரத்தல் காட்சி, சினிமா படப்பிடிப்பை விஞ்சும் வகையில் இருந்தது.
சோதனைச் சாவடியில் நிறுத்தாமல் சென்ற லாரியில் பசுமாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கடத்தப்படுவது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து ஜீப்பில் காவல்துறையினர் துரத்திச் சென்றனர். கொட்டும் மழையிலும் லாரியை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் வேகமெடுத்ததால், லாரி டயரை துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, வாகனங்கள் சென்று கொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில், லாரிக்குள் இருந்து கடத்தல்காரர்கள் வெளியேறி, குதித்துத் தப்ப முயன்றனர். டயர் பஞ்சர் ஆனதால் லாரி வட்டமடித்து நிற்க, சுற்றி வளைத்த காவல்துறையினர் துப்பாக்கி முனையில் 4 பேரைக் கைது செய்தனர். 2-3 கிமீ தூரத்திற்கு லாரியை விடாமல் துரத்திச் சென்ற போலீசார் கடத்த முயன்ற 26 பசுக்களை மீட்டு அவற்றை பசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.