Published : 27,Jul 2022 07:57 PM

’மோடி ஸ்டிக்கரும், கருப்பு மை பூச்சும்’.. செஸ் ஒலிம்பியாட் பேனரில் வெடித்த சர்ச்சை!

Chess-Olympiad-and-Modi-Photo-controversy--Here-s-the-full-background-

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை ( ஜூலை 28) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இறுதி கட்டப் பணிகள் விறுவிறுவென நடந்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாதது குறித்து பாஜகவினர் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

சென்னையில் மோடி ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினர்:

சென்னையில் வைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பிக் போட்டி விளம்பரங்களில் பிரதமர் படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் மோடியின் புகைப்படங்களை அரசு விளம்பரங்களில் ஒட்டினர். “திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாகவும் தமிழர் பண்பாட்டை நிலைநாட்டிடும் வகையில் செஸ் ஒலிம்பிக் விளம்பரங்களில் பாரத பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியுள்ளோம்” என பாஜக விளையாட்டு மட்டும் திறன் மேம்பாடு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

மதுரையிலும் செஸ் ஒலிம்பியாட் பதாகையில் மோடி ஸ்டிக்கர்:

75 ஆவது சுதந்திர தின பவள விழா கொண்டாடுவதை முன்னிட்டு அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ண கொடியான தேசிய கொடியை ஏற்றி பறக்க உத்தரவிட கோரி மதுரை ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஆகியோர் மனு கொடுக்க அக்கட்சி நிர்வாகிகளுடன் தேசிய கொடியுடன் வந்திருந்தனர். அப்போது மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மூன்று இடங்களில் ஒட்டிச் சென்றனர். மனு கொடுக்க வந்த இடத்தில் அர்ஜுன் சம்பத் மோடி ஸ்டிக்கரை ஒட்டியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டையில் தனியார் பேனரையும் விட்டுவைக்காத பாஜகவினர்:

இதேபோல புதுக்கோட்டையிலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களில் பிரதமர் மோடியின் படம் பொருந்திய ஸ்டிக்கரை ஒட்டினர். மேலும் அவர்கள் பிரதமர் மோடியின் படத்தை கைகளில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். அரசு வைத்திருந்த பேனர்கள் மட்டுமல்லாது தனியார் அமைப்புகள் வைத்திருந்த பதாகைகளிலும் பாஜகவினர் பிரதமர் மோடியின் படம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

மோடி ஸ்டிக்கர் மீது மை பூசிய பெரியார் கழகத்தினர்:

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தின் மீது பாஜகவினர் ஒட்டிய பிரதமர் நரேந்திர மோடி படம் மீது தந்தை பெரியார் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள் கருப்பு மை அடித்தனர். பிரதமர் மோடியின் படத்தை கிழித்தும், மை பூசி அழித்தும், அலங்கோலமாக மாற்றினர். இதையடுத்து மோடி ஸ்டிக்கரை கருப்பு மையால் அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த சசிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் படம் மை பூசி அழிப்பு

மோடி படம் இல்லாதது வருத்தமாக உள்ளது - தமிழிசை:

இது தொடர்பாக பேசிய புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற தயாராகி வருகின்றது. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது. தேசிய உணர்வோடு நடத்தக்கூடிய விழா. 186 உலக நாடுகளில் இருந்து வீரர்கள் குவிந்து வருகின்றார்கள். ஆனால் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம்பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Prestigious honour for Governor Dr Tamilisai Soundararajan

மோடி படத்தை ஒட்டியவர்களை கைது செய்க - கு.ராமக்கிருஷ்ணன்

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமக்கிருஷ்ணன் “பிரதமர் மோடியின் படத்தை கருப்பு மை கொண்டு அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் தமிழக அரசு விளம்பரத்தின் மீது பிரதமரின் மோடியின் படத்தை அத்துமீறி ஒட்டி, தமிழக அரசின் விளம்பரத்தை சேதப்படுத்தி உள்ள பாரதிய ஜனதா கட்சியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் கைது செய்யப்பட்டுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்களை வழக்கு பதியாமல் விடுதலை செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே பணியில் 90% வட மாநிலத்தவர்-போராட்டம் நடத்த தந்தை பெரியார் திராவிடர்  கழகம் முடிவு | nakkheeran

தமிழக அரசு சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது - அண்ணாமலை

சென்னை விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “மாநில அரசு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற வேண்டும் அல்லது வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. பாஜக தமிழகத்தில் ஆட்சி செய்யும் போது பிரதமரின் புகைப்படம் எங்கு வரும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

Waiting for our time: Annamalai over arrests of BJP workers

மத்திய விளையாட்டு துறை அமைசகம் அனுமதியில்லாமல் எப்படி இந்த போட்டியை இங்கு நடத்த முடியும்? தமிழக அரசு விளம்பர அரசாக செயல்படுவதால் ஒருவரை மட்டும் விளம்பரப்படுத்திக் கொள்கிறது. செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் புகைப்படம் கூட அதில் இல்லை. பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை என்ற உணர்ச்சிவசப்பட்டு தொண்டர்கள் பிரதமரின் புகைப்படத்தை வைத்தார்கள் ஆனால் அதை சிலர் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு அரசு தான் காரணம்” என்று கூறினார்.

சென்னையில் போட்டி நடக்க ஸ்டாலின் மட்டும்தான் காரணம்:

“ரஷ்யாவில் நடக்கவிருந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் போரினால் வேறு நாட்டில் நடத்த முடிவு செய்யப்படுகிறது. அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசுடன் எடுத்த முயற்சிகளால் போட்டி சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஊக்கமே இதற்கு காரணம். 200 கோடிகள் செலவு தமிழனின் வரி, பிறகெதற்கு மற்றவரின் படம்?” என்று திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொந்தளிக்கும் சமூக வலைதளங்கள்:

இச்சம்பவங்கள் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் தனியாகவே இடம்பெற்றுள்ளதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். நாளை பிரதமர் மோடி சென்னை வரவுள்ள நிலையில், #GoBackModi #VanakkamModi ஆகிய இரு ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்