Published : 27,Jul 2022 11:12 AM
'நாட்டின் அடையாளமான பிரதமர் மோடியின் படம் இனி எல்லா இடங்களிலும் வேண்டும்’- தமிழிசை

“செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடங்களில், நாட்டின் அடையாளமான மோடியின் படம் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும்” என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் புதுச்சேரி கடற்கரையில் தியாகச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தியாகச்சுவர் அமைக்கும் பணியினை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சபாநாயகர் செல்வம் பார்வையிட்டார்கள். இதன்பின்பு சுதந்திரப்போராட்ட வீரர் வேலு நாச்சியாரின் பெயர்பலகையை தியாகச்சுவரில் ஆளுநர் தமிழிசை பதித்தார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னையில் தேசிய பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற தயாராகி வருகின்றது. தமிழகத்திற்கு இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது, மிகுந்த பெருமைமிக்க தருணமாகும். தேசிய உணர்வோடு நடத்தக்கூடிய அவ்விழாவில் 186 உலக நாடுகளில் இருந்து வீரர்கள் குவிந்து வருகின்றார்கள். இவையாவும் மகிழ்ச்சியான விஷயங்கள்தான் என்றாலும்கூட, இதில் எனக்கு ஒரு ஆதங்கம் உள்ளது.
உலக நாடுகளில் உள்ளவர்களிடமெல்லாம் `உங்களுக்கு யார் பிரதமராக வரவேண்டும்?’ எனக்கேட்டால் அவர்களே நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என தெரிவிக்கின்றார்கள். கணக்கெடுப்பு மூலமாகவே இக்கருத்து நிரூபனமாகியுள்ளது. இப்படியாக நம் நாட்டின் அடையாளமாக இருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படம், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் எங்குமே வைக்கப்படவில்லை. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனிக்க வேண்டும். இனி எல்லா இடங்களிலும் மோடியின் படம் இடம்பெறச்செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.