Published : 26,Jul 2022 08:19 PM

தஞ்சை இருக்க இன்னொரு தலைநகர் ஏன்?..கங்கை கொண்ட சோழபுரமும் ராஜேந்திர சோழனின் அழியா புகழும்!

what-were-the-achievements-of-rajendra-chola

ராஜேந்திர சோழன் அரசனாக பதவியேற்றதும் அரண்மனைக்குள் இருந்த நாட்களை விட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பை, பரந்து விரிந்த தென்னிந்திய பரப்பை ஆட்சி செய்த மன்னனுக்கு இன்று பிறந்தநாள். கடல் கடந்து அயல்நாட்டின் மீது படையெடுத்து வென்ற முதல் தமிழக மன்னன் ராஜேந்திர சோழன் இம்மண்ணில் அவதரித்த தினம் இன்று. தந்தை ராஜராஜன் அரச பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012 ஆம் ஆண்டு இணை அரசனாக பதவியேற்றார் ராஜேந்திர சோழன். அடுத்த இரு வருடங்களில் சோழப் பேரரசின் அரியணை முழுவதுமாக அவர் வசம் வந்து சேர்ந்தது. கி.பி. 1014 முதல் தஞ்சையில் இருந்து செங்கோல் ஏந்தி மணிமுடி சூடினார் ராஜேந்திர சோழன்.

image

அரசனாக பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இருந்த நாட்களை விட, போர்க்களத்தில் இருந்த நாட்கள்தான் அதிகம். போரில் அரசர்களை வீழ்த்தி அவர்கள் ஆட்சிப்பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசர்கள் பலரை பார்த்திருப்போம். ஆனால் வீழ்த்தியவர்களிடமே மீண்டும் அரியாசனத்தை ராஜேந்திர சோழன் ஒப்படைத்த தருணங்கள் ஒருமுறை அல்ல, பல முறை மிகச் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது. கங்கை முதல் கடாரம் வரை பல போர்களை அவர் வென்ற போதிலும், அப்பகுதிகள் அந்தந்த அரசர்களிடமே மீண்டும் வழங்கப்பட்டது.

சாளுக்கியர், பாண்டியர், சேரர், சிங்கள அரசர், வங்கதேச அரசர், கடார அரசர் என இத்தனை பேரை ராஜேந்திரன் வீழ்த்த எடுத்துக்கொண்ட மொத்த காலம் வெறும் பத்து ஆண்டுகளே! அரசனாக பதவியேற்ற கி.பி. 1014 முதல் 1024 வரை போர் மட்டும்தான் ராஜேந்திரன் தன் வாழ்வில் பார்த்தது. அனைத்தையும் முடித்துவிட்டு அவர் தந்தை கட்டிய பெரிய கோவில் இருக்கும் நகரமான தஞ்சையில் அமர்ந்து அவர் ஆட்சி புரியவில்லை. தனக்கென தனி நகரத்தை., புதிய தலைநகரத்தை கட்டியெழுப்பினான் ராஜேந்திர சோழன்..!

image

ஏன் புதிய தலைநகரம்? தஞ்சைக்கு என்ன பிரச்னை?

ராஜராஜன் காலத்திலேயே சோழர்களின் படைபலம் பெருகிய போதிலும், அவை உச்சம் பெற்றது ராஜேந்திரன் காலத்தில்தான். போருக்கு ஆயத்தமாகி படைகள் வெளியேறுவதும், வென்ற பின் ஆரவாரத்துடன் அரண்மனைக்கு திரும்புவதும் தஞ்சையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகள். ஆனால் ராஜேந்திரன் காலத்தில் ஒரே சமயத்தில் அவர் கங்கை நோக்கி படையெடுக்க, அவரது தளபதிகள் ஈழம் நோக்கி படையெடுப்பர். இதனால் மிக அதிக படைகள் வருவதும் போவதுமாக இருக்கும். இவையனைத்தும் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு வேறு மாதிரியான இடைஞ்சலைக் கொடுத்தது.

image

படைகள் செல்லும்போது வயல்கள் சேதமாக துவங்கின. அரசனின் படைகள் என்பதால் மக்களும் இதைப் பற்றி எப்படி சொல்வதென்பது தெரியாமல் தவித்தபோதிலும், அரசன் செவிகளை பிரச்னை ஒருவழியாக சென்று சேர்ந்தது. மக்கள் சந்திக்கும் இடையூறுக்கு மன்னன் காரணமாக இருக்கக்கூடாது என்று முடிவெடுத்த ராஜேந்திரன், வளமான வயல்பூமியான தஞ்சையில் இருந்து ஒரு வறண்ட பூமிக்கு தலைநகரை மாற்ற முடிவெடுத்தான். இதையடுத்துதான் “கங்கை கொண்ட சோழபுரம்” உதயமானது.

image

எப்படி உருவானது கங்கை கொண்ட சோழபுரம்?

தஞ்சையில் இருந்து 50 கி.மீ தொலைவில் காவிரி வடிநிலப் பகுதியான கொள்ளிடத்தின் வடகரையில் ஒரு பெரிய வறண்ட நிலப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. தலைநகருக்கு நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு பெரிய ஏரியை வெட்டினான் ராஜேந்திரன். தஞ்சையை போல மிகப் பெரிய அரண்மனையை கட்டி எழுப்பினான் . அகழி, கோட்டைச் சுவருடன் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலம் கொண்டதாக புதிய தலைநகரம் கட்டி எழுப்பப்பட்டது.

image

தஞ்சை பெரிய கோவிலைப் போல, அங்கும் ஒரு கோவில் கட்டப்பட்டது. ஆனால் அதை விட உயரம் குறைவாகவே கட்டப்பட்டது. (185 அடி) தான் கட்டிய கோவிலின் உயரம் தந்தையின் பெரிய கோவிலை விட (216 அடி) அதிகமாக இருக்கக் கூடாது என்பதற்காக வேண்டும் என்றே ராஜேந்திரன் கட்டிய கோவில் உயரம் குறைவாக கட்டப்பட்டதாக சொல்லப்படுவது உண்டு. கங்கை வரை ராஜேந்திரன் படையெடுத்து வென்ற பின், அங்கிருந்த அரசர்களை வைத்து கங்கை நீரை தனது தலைநகருக்கு எடுத்து வந்ததன் நினைவாகவே, நகருக்கு “கங்கை கொண்ட சோழபுரம்” என்ற பெயர் நிலைபெற்றது. இப்படித்தான் கி.பி. 1025 ஆம் ஆண்டு சோழப் பேரரசின் புதிய தலைநகரம் உதயமானது. இத்தகவல்களை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன.

image

துவங்கிய பொற்காலம்:

தலைநகர் மாற்றம் பெற்றபின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அரியணையில் இருந்து ஆட்சி செய்தார் ராஜேந்திரன். இக்காலத்தில் சிற்சில போர்கள், கலகங்கள் நடைபெற்ற போதிலும், அவை மக்களின் அமைதிக்கும் வாழ்விற்கும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஆதலால் கி.பி 1025 முதல் 1044 வரையிலான அமைதிக்காலத்தை “பிற்கால சோழர்களின் பொற்காலம்” என வரலாற்று ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

image

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன்:

சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர். ராஜேந்திரன் கங்கை முதல் கடாரம் வரை வென்ற போதும் இந்த நிலை நீடித்தது. வென்ற பகுதிகளை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்சி நடத்தியிருந்தால் ராஜேந்திரன் தனியாளாக 4 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவை ஆண்டிருப்பார் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தற்போதைய இந்திய நாட்டின் பரப்பளவே அதை விட குறைவுதான். (இந்தியாவின் பரப்பளவு 3.2 லட்சம் சதுர கி.மீ.)

image

இவ்வளவு சிறப்புகளை தன்னகத்தே வைத்திருக்கும், சோழ மன்னர்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னனாக வர்ணிக்கப்படும் அரசனுக்கு ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று (ஜூலை 26) பிறந்த தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கங்கை முதல் கடாரம் வரை கொண்ட போதிலும், அப்பகுதியை அந்த அரசர்களிடம் ஒப்படைத்த “கருணை கொண்ட மன்னவனுக்கு” இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இதையும் படிக்கலாமே: தந்தை ராஜராஜனின் புகழால் ராஜேந்திர சோழனின் பெருமைகள் மறைந்து போனதா? பிரமிக்கும் போர் சாதனைகள்!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்