Published : 26,Jul 2022 10:47 AM

அதிர்ச்சி தகவல்: 3 ஆண்டுகளில் 1700 பேரை பலிகொண்ட மனித- விலங்கு எதிர்கொள்ளல்!

More-than-1000-Indians-killed-by-Tiger-and-Elephant-in-last-3-years-shocking-report

கடந்த 3 ஆண்டுகளில் புலிகள் மற்றும் யானைகளால் 1700 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது. அதேவேளையில் 230-க்கும் மேற்பட்ட புலிகளும், யானைகளும் மனிதர்களால் கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் விலங்குகள் - மனிதன் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்னை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இதில் மிக முக்கியமாக நகரமயமாக்களின் வளர்ச்சியின் காரணமாக காடுகளின் பரப்பளவு சுருங்குவதால் விலங்குகள் - மனிதன் இடையிலான மோதல் அதிகரித்திருக்கிறது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளை வனத்துறையும், தன்னார்வ அமைப்புகளும் அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வந்தாலும், அதற்கான தீர்வு கிடைத்தபாடில்லை. இதன் விளைவாகவே இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் தெரிய வந்திருக்கிறது.

image

மிக முக்கியமாக 2019 முதல் 2022 வரை 29 புலிகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதே ஆண்டுகளில் 222 யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும், 11 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 67 புலிகள் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அது தொடர்பான விசாரணை இன்னுமும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. யானைகள் தாக்கிய மனிதர்கள் உயிரிழப்பு மிக அதிகமாக 3 மாநிலங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஓடிஷாவில் 322, ஜார்கண்ட் 292, அசாம் 229 யானைகளுால் தாக்கப்பட்டு பலியாகி இருக்கிறார்கள். தமிழகத்தில் 152 பேரும், கர்நாடகாவில் 69 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் கர்நாடகாவில் புலி தாக்கி 5 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதேபோல மின்சாரம் பாய்ந்து யானைகள் அதிகளவில் உயிரிழந்த மாநிலங்களில் ஒடிஷா (41), தமிழ்நாடு (34), அசாம் (33), கர்நாடகா (26) மற்றும் மேற்கு வங்கம் (19) ஆகியவை இருக்கின்றன.

image

யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்புக்கு காரணம் என்ன?

விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.

ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.

விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.

image

புலிகளுக்கான பாதுகாப்பு?

இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. புலிகளை காக்க இந்தியா தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காகக்தான் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி, புலியை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவித்தது. அழகும், கம்பீரமும் அதன் உறுமலும்தான் புலிக்கு இந்திய தேசிய விலங்கு என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

1973 ஆம் ஆண்டு வங்காளப் புலி (பெங்கால் டைகர்) இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பல்வேறு காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாக குறையத் தொடங்கியது. இதனால், புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்