”திமுகவுக்கு அடுத்து என்பவர்களுக்கு எங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்” - செல்லூர் ராஜூ சூசகம்

”திமுகவுக்கு அடுத்து என்பவர்களுக்கு எங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்” - செல்லூர் ராஜூ சூசகம்
”திமுகவுக்கு அடுத்து என்பவர்களுக்கு எங்கள் ஆர்ப்பாட்டம் ஒரு பாடம்” - செல்லூர் ராஜூ சூசகம்

திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் என்போருக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் ஒரு பாடம் என பாஜக குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருப்புச் சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி திமுகவுக்கு எதிராகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது...

அதிமுக இயக்கத்தை கட்டிக்காக்க தலைமையேற்று திமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்துள்ளார். மக்களுக்கு ஷாக் அடிக்கும் சூழ்நிலையை திமுக உருவாக்கி உள்ளது. அதிமுக எடப்பாடி தலைமையில் ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த கூட்டம். இது காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட கூட்டம் அல்ல. தானா சேர்ந்த கூட்டம். ஆர்ப்பரித்து சேர்ந்துள்ள கூட்டம்.

ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை வருடத்தில் திமுக ஒன்றுமே செய்யவில்லை. ஸ்டாலின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பொய்யை தான் சொல்கின்றனர். வாய்ச் சவடால் தான் பேசுகின்றனர். தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 39 கோடியை ஒதுக்கீடு செய்து கலைஞர் நினைவிடம் கட்டுகிறார்கள். கலைஞர் பயன்படுத்திய பேனா உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய பேனாவை கடலில் கட்ட போகிறார்களாம். மக்கள் கடனில் தவிக்கிறார்கள். கடலில் பேனா கட்டுகிறார்களாம். கடனில் தவிக்கும், பசி பட்டினியில் மக்கள் தவித்து கொண்டுள்ள போது கலைஞர் பேனாவுக்கு சிலையா.

சிமெண்ட் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் போது 81 கோடி ரூபாயில் பேனாவுக்கு சிலையா. இதுக்கு பணம் உள்ளது. வாக்களித்த மக்களுக்கு பணம் இல்லையா. ஸ்டாலின் அவர்களே நியாயமா இது. தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல மதுரையில் 100 பேருந்துகள் ஓடிய நிலையில் வெறும் 39 பேருந்துகளே ஓடுகின்றன. மதுரை மக்களுக்கு ஒரு சல்லி பைசா கொடுக்காத அரசு திமுக. ஆனால் அப்பா பெயரில் நூலக கட்டிடம் கட்ட மட்டும் நிதி உள்ளது. திட்டங்களுக்கும், மதுரைக்கும் கொடுக்க திமுகவுக்கு வக்கில்லை வகையில்லை. இதுதான் ஆட்சியின் திறனா? விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வீட்டுவரி உயர்வு இனிமேல் தான் வர உள்ளது. 

ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே கொரோனா, குரங்கு அம்மை என வந்து கொண்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்சாரம் இல்லாமல் போய் விடுகிறது. திமுக ஆட்சியில் வராத மின்சாரத்திற்கு மின்சார கட்டணம் உயர்வு வேறா?. மின் கட்டண உயர்வுக்கு செந்தில் பாலாஜி என்ன சொல்றாரு, ஓன்றிய அரசு அழுத்தம் கொடுத்தார்கள் என கூறுகிறார். திமுக ஒன்றிய அரசு சொன்னதை எல்லாம் செய்தாகளா? ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொன்னார்கள். அதை திமுக அரசு செய்ததா?

அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 10, 20 காசு உயர்த்திய போது பதாகையை கையில் ஏந்தி போராட்டம் நடத்தியவர் முதல்வர். தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கும் சூழ்நிலை உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது. எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் தமிழகம் முன்மாதிரியாக சிறப்பாக இருந்தது. இவர்கள் ஆட்சியில் இந்தியாவிலேயே மோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கு சென்று விட்டது. இது முதல்வருக்கு வெட்கமாக வேதனையாக இல்லையா?. தமிழகத்தில் மாணவர்களுக்கு மாணவிகளுக்கு பாதுகாப்பே இல்லை. நீட்டை ரத்து செய்ய என் தந்தைக்கு தான் சூசகம் தெரியும் என உதயநிதி சொன்னாரு. இப்போ வரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. திமுக வாக்குறுதி கொடுத்தும் இரண்டு முறை நீட் தேர்வு நடைபெற்று விட்டதே பிணத்தை வைத்து, மாணவர்களின் உயிரை வைத்து அரசியல் நடத்திய திமுக நீட்டை ரத்து செய்யாதற்கு பதில் சொல்ல வேண்டும். காமராஜர் ஆட்சியில் கல்வி கற்றுக் கொடுத்தார். ஆனால் கருணாநிதி ஆட்சியில் குடிக்க கற்றுக் கொடுத்தார்கள். 92 மெட்ரிக் டன் அரிசி பால்பட்டு போச்சு. ஆனால் 92 ஆயிரம் கிலோ அரிசி தான் வீணாணது என அமைச்சர் சொல்கிறார். இது உன் அப்பன் வீட்டு பணமா.

10 ஆண்டுகளில் மக்கள் சுபிட்மாக இருந்தார்கள். ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு என திமுக செயல்படுகிறது. அதிமுக காலத்தில் பொங்கலுக்கு அள்ளி அள்ளி கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 5 பைசாவாவது கொடுத்தார்களா. என் தந்தை ஆட்சிக்கு வருவார் நகையை அடகு வைங்க வைங்க என்று சொல்லி 43 லட்சம் பேர் அடகு வைத்த நிலையில் 13 லட்சம் பேருக்கு தான் நகைக்கடன் கொடுத்தீர்கள். 1000 மகளிர் உதவித் தொகைக்கு எப்போ கணக்கெடுப்பு நடத்தி எத்தனை பேருக்கு கொடுக்க போறீங்க.

ஒரு அனிதா செத்ததுக்கு பயங்கரமாக போராடினாங்க, இப்ப கள்ளக்குறிச்சி பிரச்னையில் ஆளும் கட்சியும், அதன் தோழமைகளும் எங்கே போனார்கள்? முல்லை பெரியாறு அணையை காப்பாற்ற வக்கு இல்லையா என முதல்வரிடம் கேள்வியை முன் வைக்கிறேன். அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திய விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் தற்போது ஆளையே காணவில்லை. திருமாவளவன், வைகோ மார்க்சிஸ்ட் கட்சியினர் தற்போது வாயை திறப்பதே இல்லை. வாயில் திண்டுக்கல் பூட்டு போட்டுள்ளார்கள்.

லெஜண்ட் சரவணன் மாதிரி வரும் ஸ்டாலின் செஸ் போட்டிக்கு விளம்பரம் தருகிறார். ஆனால் செஸ் சாம்பியன்களை அதில் காணோம். திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள் தான். திமுகவிற்கு அடுத்து நாங்கள் தான் எனக் கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடமாக இருக்கும் என பேசினார்.

மதுரை செய்தியாளர் மணிகண்ட பிரபு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com