Published : 21,Jul 2022 06:20 PM

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்!’.. வேதாவை விக்ரம் கொல்லணுமா.. விட்டுவிட வேண்டுமா?- எது தர்மம்?

Five-years-of-vikram-vedha-tamil-movie-which-played-by-vijay-sethupathi-and-R-Madhavan-and-directed-by-pushkar-gayathri

விக்ரமாதித்தன் - வேதாளம் கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு வகையான நீதிபோதனைதான் இந்த கதைகள். விக்ரமாதித்தன் கழுத்தில் அமர்ந்து கொண்டதும் வேதாளம் கதை சொல்ல ஆரம்பிக்கும். கதையின் முடிவில் ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு தர்மத்தின் அடிப்படையில் எந்த விடை பொறுத்தமாக இருக்கும் என்பதே விடை. ஒவ்வொரு முறையில் கதை சொல்லும் போதும் விக்ரமாதித்தனின் தலையே வெடிக்கும் அளவிற்கு அதில் புதிர் இருக்கும். இறுதியில் அதில் இருந்து ஒரு தெளிவான விடை கிடைக்கும். இந்த விக்ரமாத்தன் - வேதாளம் கதையை அடிநாதமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆகச்சிறந்த படைப்புதான் விக்ரம் வேதா திரைப்படம்.

image

தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு பஞ்சமில்லை. அதேபோல், போலீஸ் என்கவுண்ட்டர் குறித்த படங்களும் எண்ணிலடங்கா. ஆனால், இவையெல்லாம் ஒன்று காவல்துறையை தூக்கிப்பிடிக்கவோ அல்லது கேங்ஸ்டர் வாழ்க்கையை மிதமிஞ்சிய அளவில் உயர்வாக காட்டியுமே எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், விக்ரம் வேதா எல்லா படங்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. ஒரு நேர்மையான போலீஸ் மற்றும் ஒரு வாழ்வின் நிலைமையில் இருந்து கேங்ஸ்டராக உருவான ஒருவன். இவர்கள் இரு தரப்பில் வாழ்வின் நியாய தர்மங்களை அலசுவதே இந்தப் படமும்.

இந்தப் படம் எந்த கருத்தையும் நேரடியாக சொல்லாது. ஆனால், வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும், (வேதா வாழ்க்கை) ஒரு இக்கட்டான சூழலில் எதன் அடிப்படையில் நம்முடைய முடிவுகள் இருக்க வேண்டும் என்பதும்; (விக்ரம் வாழ்க்கை) கண்ணை கட்டிக்கொண்டு வாழ்க்கையை அணுகக் கூடாது, தன்னை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் சூழ்நிலைக்கு பலிகடா ஆக்கப்படுவோம்.

’ஒரு பிரச்சனைன்னா அந்தப் பிரச்சனைய மட்டும் பார்க்காத, அதுக்கான காரணத்த பாரு’

’முடிவு பண்ணிட்டு தேடாத... தேடிட்டு முடிவு பண்ணு!’

‘நமக்கொன்னு தேவன்னா, அதுக்காக டிரை பண்ணாம இருக்குறது தான் தப்பு!’

’உனக்கு ஒரு வேலை ஆவனும்னு வச்சுக்கோயன்...அவன் யாரு, எங்க இருக்கான்னு -ல பாக்கக்கூடாது நம்ம வேல ஆவுதா இல்லையானு தான் பாக்கணும்!’.. இதுபோன்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கும்.

image

கதைப் பற்றிய சுருக்கம்:

வடசென்னையில் மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கும் வேதாவையும் அவனுடைய சகாக்களையும் என்கவுண்ட்டர் செய்ய போலீஸ் அதிகாரியான விக்ரம் உள்ளிட்டோரை கொண்ட டீம் அமைக்கிறார்கள். இவர்கள் செய்யும் என்கவுண்ட்டரில் இருந்துதான் படமே தொடங்குகிறது. இந்த என்கவுண்ட்டருக்கு பின் வேதாவே போலீசில் சரணடைகிறார். விசாரணையில் முதல் முறையாக விக்ரமும், வேதாவும் நேராக சந்திக்கிறார்கள். அப்பொழுது தன்னுடைய கதையை விக்ரமிற்கு சொல்கிறார் வேதா. குறிப்பிட்ட இடத்தில் அந்த கதையை நிறுத்துகிறார். பின்னர், உடனடியாக ஜாமீனில் வெளியேறுகிறார். வேதா சொன்ன கதையில் இருந்து விக்ரம் சில விடைகளை நோக்கி நகர்கிறார். மொத்தமாக மூன்று முறை விக்ரமிடம் வேதா தன்னுடைய வாழ்க்கை கதையை சொல்கிறார். ஒவ்வொரு முறையும் வேதா சொல்லும் கதையும் விக்ரமிற்கு பல புதிர்களை தீர்க்க உதவுகிறது. இதில், விக்ரமின் மனைவியையே தன்னுடைய வழக்கறிஞராக வேதா பயன்படுத்துகிறார்.

image

இந்தக் கதையில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகவும் நேர்த்தியாக படைத்திருக்கிறார்கள் புஷ்கர் காயத்ரி. அந்தந்த கதாபாத்திரங்களுக்கு என்று ஒரு நியாய தர்மம் இருக்கிறது. அந்த நியாய தர்மங்கள் வாழ்க்கை அனுபவங்களால் எப்படி மாறுகிறது என்பதே படத்தின் முக்கியமான அம்சம்.

விக்ரம்:

நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற நினைப்புடன் இருந்து வருகிறார். தான் கெட்டவர்களைதான் கொல்கிறேன் அதனால் இரவில் குறட்டை விட்டு தூங்குகிறேன் என்று அவர் கூறுகிறார். தான் என்கவுண்ட்டர் செய்பவர்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறார். நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்குமான சண்டையில் காவல்துறை நல்லவர்கள் பக்கம் இருப்பதாக நினைக்கிறார். ஆனால், இறுதியில் அவருக்கு தெரியவரும் உண்மைகள் அவரை சுட்டுவிடுகிறது. தானே ஒரு கருவியாக பயன்பட்டிருப்பதை நினைத்து மனம் வருந்துகிறார்.

தொடக்கத்தில் விக்ரமின் பார்வையில் வேதா கெட்டவன். புதிர்கள் விடைகாணப்பட்ட பின் வேதா மீதான விக்ரமின் பார்வை சற்றே மாறுகிறது.

image

வேதா:

வேதாவுக்கு இரண்டு உலகங்கள். ஒன்று அவனது தம்பி புள்ளி. மற்றொன்று கேங்ஸ்டர் தொழில். வேதாவுக்கும், புள்ளிக்குமான பாசப்பிணைப்பு ஒரு அழகான கவிதை. தன் வாழ்க்கை எப்படி இருந்தாலும் தம்பி புள்ளி நன்றாக படித்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்புகிறார். அதன் பொருட்டே முக்கியமான நேரங்களில் முடிவுகளை எடுக்கிறார். தம்பியை இழந்த பின் அதற்கான காரணத்தை தேடியே விக்ரமின் முதுகில் வேதாளமாக பயணிக்கிறார். இயல்பாக வாழ்க்கையில் இருந்து பல்வேறு கட்டங்களில் இருந்து கேங்ஸ்டர் நிலைக்கு செல்கிறார். வாழ்க்கையின் யதார்த்தமான தன்மையாலும், அனுபவமிக்க அணுகுமுறையாலும் நம்மை மிரள வைக்கிறார்.

வேதாவின் பார்வையில் விக்ரம் நேர்மையான அதிகாரிதான். அவன் மீது மரியாதை வைத்திருக்கிறார். அதனைத் தான் ஒரு இடத்தில் உன்மேல எனக்கு கோவமே வரல சார் என வேதா சொல்வார்.

புள்ளி...

வேதாவின் தம்பி புள்ளிக்கும் இரண்டு உலகங்கள் தான். ஒன்று அண்ணன் வேதா, மற்றொன்று பால்ய தோழியும், காதலியுமான சந்திரா. அண்ணன் விரும்பிய படி கணிதத்தில் திறமையான ஆளாக உருவாகி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் வித்தையை மேற்கொள்கிறார். ஒரு கட்டத்தை சந்திராவுக்காக அண்ணனையே எதிர்க்கவும் துணிகிறார்.

image

சந்திரா:

புள்ளியின் வாழ்க்கையில் சிறுவயதில் இருந்தே பயணித்து வருகிறார். அவனை விட இரண்டு வயது மூத்தவள். புள்ளியை தாண்டி, பணத்தின் மீது அவளுக்கு கொஞ்சம் பற்றுதல் இருக்கிறது. வசதியுடன் நல்ல வாழ்க்கையை புள்ளியோடு வாழ வேண்டும் என விரும்புகிறார். இவரது பணத்தின் மீதான பற்றுதல் சிறுவயது காட்சியிலே இயக்குநர்கள் அழகாக சித்தரித்திருப்பார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் பணத்தை விட புள்ளி உடனான உறவே முக்கியமான முடிவெடுக்கிறார்.

image

சைமன்:

விக்ரமின் நீண்ட கால நண்பர். காவல்துறை அதிகாரியாக அதே என்கவுண்ட்டர் டீமில் விக்ரமுடன் இருக்கிறார். நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் சந்தர்ப்ப சூழலால் தன்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட நோயின் சிகிச்சைக்கான செலவுக்காக போலி என்கவுண்ட்டரில் இணைந்து கொள்கிறார். ஆனால், அவரது மனசாட்சி அவரை நாளுக்கு நாள் கொல்கிறது. அவர் திருந்த நினைக்கும் நேரத்தில் கொல்லப்படுகிறார்.

image

திருடன் போலீஸ் கதை:

வேதா ஒவ்வொரு முறை கதை சொல்லும் போதும் மூன்று டைட்டில் போடுவார்கள்.

1. திருடன் - திருடன் : கேங்ஸ்டர்களான ரவி, சேட்டா ஆகியோர் வேதா வாழ்க்கையில் நுழைந்து எப்படி அவனையும் கேங்ஸ்டர் ஆக்குகிறார் என்பதே கதை
2. திருடா - திருடி : சேட்டாவுக்காக வேதா வேலை செய்துவரும் நிலையில், சந்திரா பணத்தை எடுத்துக் கொண்டு செல்வதால் ஏற்படும் விளைவுகள். அது வேதா வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம்.
3. திருடன் - போலீஸ் : வேதா கேங் ஆட்களை போலீஸ் என்கவுண்ட்டர் செய்வது. இந்த என்கவுண்ட்டரில்தான் அப்பாவியான புள்ளி கொல்லப்படுவான்.

image

விடையை தேடி இரண்டு விதமான பயணம்

தன்னுடைய நண்பரும் என்கவுண்ட்டர் டீமில் இருந்த சைமன் கொல்லப்பட்டது எப்படி என்பதற்கான கேள்வியை நோக்கி விக்ரமும், தன்னுடைய தம்பி புள்ளி எப்படி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார் என்பதை தெரிந்து கொள்வதற்கான பயணத்தில் வேதாவும் இருக்கின்றனர். இறுதியில் இருவருக்கும் அதிர்ச்சியான விடை கிடைக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருவருக்குள்ளும் வாழ்க்கை குறித்த நியாய தர்மங்களின் அர்த்தங்கள் மாறிவிடுகிறது. நல்லவன்/கெட்டவன் என்ற விக்ரமின் எண்ணங்கள் சுக்கு நூறாக உடைகிறது. கெத்தாக வாழ்ந்து வருவதாக கருதிய தன்னுடைய வாழ்க்கை கண்முன்னே சமாதி ஆக்கப்படுவதை கண்டு வாழ்வின் அர்த்தத்தை வேதா உணர்கிறான். வேதா சொல்வது போல் எப்படி இருந்தாலும் நீயும் நானும் ஒன்றுதானே என்று சொல்வதே இறுதியில் கிட்டதட்ட உண்மையாகிறது.

விக்ரமாதித்தன் - வேதாளம் கதையின் படி, வேதாளத்தின் சாபத்தை விக்ரமாதித்தன் போக்குவான். அதேபோல், விக்ரமிற்கு தன்னுடைய கதையை சொல்லியே வேதா தன்னுடைய வாழ்க்கையில் உருவான புதிருக்கும் விடையை கண்டுபிடிப்பான்.

image

தொன்மமும் புதிய கதைகளமும்:

தொன்மமான கதைகளை எடுத்துக் கொண்டு அதில் நிகழ்கால பிரச்னைகளை பேசும் வழக்கும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பாஞ்சாலி சபதத்தை பாரதியார் கைகொண்டு சுதந்திர போராட்ட கருவை உள் வைத்தார். நந்தன் கதையை புதுமைபித்தன் புதிய நந்தனாக அன்றைய கால ஜாதிய சிக்கல்களை மிக நேர்த்தியாக பேசினார். இப்படி பலரும் ஒரு தொன்ம கதை அல்லது இலக்கியத்தின் மூலம் தான் நினைக்கும் கருத்துக்களை முன் வைக்க முயற்சி செய்துள்ளனர். அப்படிதான் விக்ரமாதித்தன் - வேதாளம் கதையை கொண்டு இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இணையர் மிக அழுத்தமாக ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கின்றனர். விஜய்சேதுபதியின் திரைவாழ்க்கையில் அவர் கையாண்ட கதாபாத்திரங்களில் வேதாவிற்கு முதலிடம் கொடுக்கலாம். மாதவனின் சினிமா வாழ்க்கையிலும் இறுதிச் சுற்றுக்கு பிறகு வெளியான விக்ரம் வேதாவும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக அமைந்தது.

எது தர்மம்:

முதல் கதையை சொல்லி முடித்த பின், எழும் கேள்வி, செய்தவனையா? செய்ய சொன்னவனையா? யாரை கொல்வது என்ற கேள்வி வரும். அதற்கு செய்ய சொன்னவரைதான் கொல்வதே தர்மம் என விக்ரம் சொல்வார்.

இரண்டாவது கதையில், தம்பி மீதான பாசமா? நேசிக்கும் தொழிலா? என்ற கேள்வி எழும் போது, அப்பாவியான தம்பிதான் முக்கியம், கெட்டவன் ஆன சேட்டாவை எதிர்ப்பதே தர்மம் என சொல்வான் விக்ரம்.

image

இறுதியில், விக்ரம் - வேதா இருவரும் ஒரு புள்ளிக்கு வந்து சேர்ந்திருப்பார்கள். இப்பொழுது விக்ரம் முன் ஒரு கேள்வி இருக்கும், 16 கொலைகள் செய்வதன் என்பதால் வேதாவை கொல்ல வேண்டுமா?. தன்னை காப்பாற்றியதோடு உண்மையை உணர வைத்ததற்காக கொல்லாமல் விட்டுவிடுவதா என்ற கேள்வி எழும். அந்த கேள்வியோடு படமும் முடிந்துவிடும். விடையை புதிய தலைமுறையின் வாசகர்கள் கமெண்ட்டில் பதிவிடலாம்..

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்