Published : 16,Sep 2017 03:29 AM

சென்னை உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டு விழா

125th-anniversary-of-Madras-HC-heritage-building-today

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 125வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்'ஆக செயல்பட்டு வந்த நிலையில், இந்தியாவின் முதல் மூன்று நீதிமன்றங்களை ஆங்கிலேய அரசு நிறுவியது. இவற்றில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 1862ல் தொடங்கப்பட்டது. 
பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன், உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பு, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது. 1892ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு அப்போதைய கவர்னர் பெய்பி பாரன் உயர் நீதிமன்ற சாவியை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சர் ஆர்தர் கெலின்ஸ் வசம் ஒப்படைத்தார். 

அதனடிப்டையில் உயர் நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 125 ஆண்டுகள் ஆகிறது. இதற்கான விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்