+2 மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி? - மாணவர்கள் புகார்

+2 மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி? - மாணவர்கள் புகார்
+2 மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி? - மாணவர்கள் புகார்

மாணவர்கள் தாங்கள் எழுதிய  விடைத்தாள் நகல்  பெற்று மறு கூட்டல் செய்து பரிசோதித்ததில் மதிப்பெண்களை கூட்டி வழங்கியதில் ஆசிரியர்கள் இழைத்த  தவறினை சம்பந்தப்பட்ட மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை  12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்குரிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டது அந்தவகையில் தேர்வு முடிவு வெளியான பின்பு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் விடைத்தாள் நகலை பெற்று வழங்கப்பட்ட மதிப்பெண்களை பரிசோதித்தபோது மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி நடந்தது தெரிய வந்துள்ளது. மாணவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை காட்டிலும் குறைவான  மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். குறிப்பாக வேதியியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை காட்டிலும் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

வேதியியல் பாடத்தில் 57 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு செய்முறை தேர்வு 30 மதிப்பெண்கள் என 87 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர், விடைத்தாளை சோதித்தபோது 67 மதிப்பெண்கள் வந்துள்ளது. 30 செய்முறை தேர்வு மதிப்பெண்களை கூட்டினால் அம்மாணவர் 90 மதிப்பெண்களை வேதியியல் பாடத்தில் பெற்றிருக்க வேண்டும். ஆனால் விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் அதன்பின்னர் பரிசோதித்த விடைத்தாள் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடைபெற்றுள்ள தவறை உணராமல் தவறான  மதிப்பெண்களை வழங்கியுள்ளனர்

அதேபோல இயற்பியல் பாடத்தில் மாணவர் ஒருவர் 72 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் விடைத்தாள் பெற்று சோதித்தப்  பிறகு அம்மாணவர் 82 மதிப்பெண்களை பெற்றுள்ளார். அதேபோல கணினி அறிவியல் பாடத்தில் 85 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விடைத்தாள்களை பெற்று மதிப்பெண்களை பரிசோதித்ததில் அவர் தற்போது 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பிறகு சரியாக திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க முதல்நிலை மதிப்பீட்டாளர், இரண்டாம் நடை மதிப்பீட்டாளர், முதன்மை மதிப்பீட்டாளர் என ஆசிரியர்கள் தேர்வுத் துறையால் பணியில் அமர்த்தப்படுவர். ஆனால்  இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை கூட்டி தவறாக பதிவுசெய்யப்பட்டதை  யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது

லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் பொதுத்தேர்வில் இவ்வாறு மதிப்பெண்களை முறையாக வழங்க தவறுகின்ற போது பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம்,   கலை மற்றும் அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட அனைத்திலும் இந்த மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரி இடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய தவறு பல நூறு மாணவர்களுக்கும் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com