Published : 16,Jul 2022 05:23 PM
பத்திரிகையாளர் கஷோகி மரணத்திற்கு சவுதியே பொறுப்பு - ஜோ பைடன் நேரடி குற்றச்சாட்டு

பத்திரிகையாளர் கஷோகி மரணத்திற்கு சவுதியே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடனான சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானை பைடன் சந்தித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், பத்திரிகையாளர் கஷோகி மரணத்திற்கு நீங்களே பொறுப்பு என இளவரசரிடம் தாம் கூறியதாக தெரிவித்தார்.
கஷோகியின் மரணத்திற்கு தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு இல்லை என இளவரசர் அப்போது தன்னிடம் பதில் அளித்ததாக பைடன் தெரிவித்தார். கஷோகியின் மரண விவகாரத்தில் சவுதி அரேபியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு நாட்டின் அதிபராக, தான் கருதுவதாகவும் இதை கூறுவதில் தனக்கு எந்த கவலையும் இல்லை என்றும் பைடன் ஏற்கனவே கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவை சேர்ந்த கஷோகி, வாஷிங்டன் போஸ்ட் இதழின் பத்திரிகையாளராக இருந்து வந்தார். சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து கஷோகி எழுதி வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற கஷோகியை அதற்கு பின் காணவில்லை. அங்கு அவர் கொல்லப்பட்டது பின்னால் தெரியவந்தது.
கஷோகியின் கொலையின் பின்னணியில் சவுதி இளவரசர் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. இந்நிலையில் அப்பிரச்னையை சவுதி இளவரசரிடம் அமெரிக்க அதிபர் நேரில் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.