Published : 15,Sep 2017 04:55 PM
பாலியல் வன்கொடுமை செய்த போலீஸார்: கிணற்றில் போடப்பட்ட கல்லாய் வழக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரால் நான்கு பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் ஆறு ஆண்டுகள் ஆன பிறகும் விசாரணையே தொடங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தி.மண்டபம் பகுதியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியரின் இரு மகள்கள் மற்றும் இரு மருமகள்களை திருக்கோவிலூர் ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகரன், காவலர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகிய 5 போலீசாரும் கடந்த 2011 ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக 5 போலீசார் மீதும் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலா 5 லட்சம் வீதம் 20 லட்சம் நிவாரணம் வழங்கினார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் சீனுவாசன், உதவி ஆய்வாளர் ராமநாதன் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழிகாட்டுதல் உத்தரவை பெற்று, விழுப்புரம் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளனர். பாலியல் குற்றம் நடந்து 6 ஆண்டுகளாகியும் மாநில அரசும் வழக்கு விசாரணையை தொடங்கவில்லை. உயர்நீதிமன்றமும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.