Published : 13,Jul 2022 07:50 PM
‘விருமன்’ படத்துடன் மோதும் ‘பிசாசு 2’ - வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் மிஷ்கினின் ‘பிசாசு 2’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிசாசு’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில், படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் பெங்களூரில் நடந்தது.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். திகில் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டி. முருகானந்தத்தின் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படம் வெளியாவதாக ட்விட்டர் பக்கத்தில் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழு முதற் கடவுள் விநாயகரின் ஆசியோடு விநாயகர் சதூர்த்தி ஆகஸ்ட் 31 அன்று உங்கள் அபிமான திரையரங்குகளில் #Pisasu2 #பிசாசு2 உலகமெங்கும் வெளியாகிறது.@DirectorMysskin @andrea_jeremiah @VijaySethuOffl
— RockFort Entertainment (@Rockfortent) July 13, 2022
@Lv_Sri @shamna_kkasim @kbsriram16 @SVC_official @KFilmFactory @saregamasouth pic.twitter.com/ePBiouWFwe
அதே விநாயகர் சதுர்த்தியில் தான் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விருமன்’ படமும் வெளியாகிறது. மேலும், விநாயகர் சதுர்த்தி அன்று சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், தீபாவளி பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆண்ட்ரியாவின் ‘பிசாசு 2’, கார்த்தியின் ‘விருமன்’ ஆகியப் படங்கள் விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.