Published : 13,Jul 2022 01:45 PM
திருமணத்தை மீறிய உறவு: கண்டித்த கணவர் மீது ஆசிட் ஊற்றிய இளைஞர் கைது

தன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த நபரை கண்டித்த கணவன் மீது ஆசிட் வீசிய இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு வேண்டாம்மாள் (35) என்ற மனைவி உள்ள நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வேண்டாம்மாள், ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் சக்திவேல் (26) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார்.
இதனையறிந்த ராமன், சக்திவேலை பலமுறை எச்சரித்துள்ளார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட சான்றோர் குப்பம் கண்ணதாசன் நகர் பகுதிக்கு ராமனை வரவழைத்த சக்திவேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இதில், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ராமனின் முகம் மற்றும் மார்பு பகுதியில் ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் அலறி துடித்த ராமனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து ராமனின் உறவினர்கள் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சக்திவேலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் சக்திவேலின் தொலைபேசியை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்து சக்திவேலை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.