Published : 13,Jul 2022 08:39 AM
உலகின் கொடிய விஷத்தோட்டம்: ”தொட்டா கெட்டீங்க” என விசிட்டர்களை எச்சரிக்கும் நிர்வாகம்!

பூத்துக் குலுங்கும் செடிகள், எழில் கொஞ்சும் சுற்றுச்சூழலை காணும் எவருக்குமே ஒருவித புத்துணர்ச்சியும், மன நிம்மதியும் கிடைக்கும். நம்மூர்களில் மலர் கண்காட்சி என வைத்து அரிய வகை தாவரங்களை அடுக்கி அதனை காட்சிப்படுத்தும் விதமே அத்தனை ஆச்சர்யமாக பார்க்கப்படும்.
இப்படி மன மகிழ்வை கொடுக்கும் தாவரங்களுக்கு மத்தியில் கொடிய தாவரங்களும் இருக்கவேச் செய்கின்றன. அப்படிப்பட்ட தாவரத்தை நுகர்ந்தாலே மயங்கியும், இறந்தும் விடுவார்கள் என்று எச்சரிக்கிறது உலகின் நச்சுத் தாவரத் தோட்ட நிர்வாகம்.
இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்டின் அல்ன்விக் என்ற பகுதியில்தான் இந்த நச்சுத் தோட்டம் அமைந்திருக்கிறது. இதனை Worlds Deadliest Garden என்று பகிரங்கமாகவே அழைக்கிறார்கள்.
The sun almost makes The Poison Garden a little less scary ☠️
— The Alnwick Garden (@AlnwickGarden) June 25, 2022
Walk beyond the gates for your guided tour to learn not everything is as it seems in a quaint English Garden. Tours are included with Garden Entry, just ask our friendly guides! pic.twitter.com/bD5fOKJVxH
இது தொடர்பான ட்விட்டர் பதிவுகள் அண்மையில் வெளியான நிலையில் தற்போது இந்த நச்சுத் தோட்டம் குறித்து பலருக்கும் தெரிய வந்திருக்கிறது.
இந்த தோட்டத்தில் நூற்றுக்கும் மேலான கொடிய விஷத்தன்மை கொண்ட தாவரங்கள் இருக்கின்றனவாம். ஆனால் ஆண்டுதோறும் இந்த தோட்டத்தை ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் வந்து பார்த்து செல்கின்றனராம்.
ஆனால் இந்த தோட்டத்தை காண வருவோர் அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டியுடனேயே செல்ல வேண்டும். தோட்டத்தில் உள்ள எந்த தாவரங்களையும் தொடவோ, நுகர்ந்து பார்க்கவோ கூடாது, சுயமாக தோட்டத்தினும் வர எவருக்குமே அனுமதியில்லை என தோட்ட நிர்வாகம் கறார் காட்டுகிறது.
இருப்பினும் சிலர் அதீத ஆர்வக்கோளாறில் விதிகளை மீறி அதனை நுகர்ந்து பார்க்க முயன்று பொத்தென மயங்கி விழும் சம்பவங்களும் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Alnwick Poison Garden at Alnwick Castle, England ,was established in 2005 by the Duchess of Northumberland who’s affinity for the apothecary gardens inspired the collection of nearly 100 deadly and hallucinogenic plants.#FaustianFriday pic.twitter.com/Qwpo0D3WmM
— Susmita (@SusmitaUkil) February 26, 2021
இதுபோக, இந்த தோட்டத்துக்குள் நுழையும் போதே எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் பிரதான நுழைவு வாயிலின் முன் The Poison Garden என பிரகடனப்படுத்துவதோடு, மண்டை ஓடு, எலும்பு பொறிக்கப்பட்ட கதவுகளில் இந்த தாவரங்கள் உங்களை கொல்லக்கூடும் என்ற வாசகத்தோடுதான் வரவேற்பை அளிப்பதாக இருக்கிறது.
கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்ற ரிசின் என்ற நச்சுத் தாவரமும் இந்த தோட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம். இப்படியான அதீத நச்சுத்தன்மை கொண்ட தாவரமாக அவை கருதப்பட்டாலும் நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் அவற்றுக்கு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக Yew Tree என்ற தாவரம் இருபதே நிமிடத்தில் ஒருவரை கொல்ல வல்லது. ஆனால் இந்த தாவரம் உற்பத்தி செய்யும் டாக்ஸால்தான் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என கூறுகிறார்கள்.