அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் கொள்ளையடித்ததாக புகார்

அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் கொள்ளையடித்ததாக புகார்
அதிமுக அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் கொள்ளையடித்ததாக புகார்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய 3 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமைக்கழகம் முன் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

3 உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து மயிலாப்பூர் துணைஆணையர் திஷா மிட்டல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையே சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தில் உதவி ஆணையர் தலைமையில் 75 காவலர்கள் 2வது நாளாக பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர். அதிமுக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையின் இருபுறத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக தென் சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பயங்கர ஆயுதங்களை கொண்ட ரவுடிகளின் துணையுடன் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்டோர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்ததாகவும், பூட்டப்பட்டு இருந்த கேட்டை அடித்து உடைக்க ரவுடிகளை ஏவியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அலுவலகத்தில் அத்துமீறி நுழைத்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியதாகவும், முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கொள்ளையடித்து சென்றதாகவும் ஆதிராஜாராம் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com