இங்கிலாந்தை ஊதி தள்ளி இந்திய அணி அபார வெற்றி - போட்டியில் நிகழ்ந்த 5 சாதனைகள் இதோ.!

இங்கிலாந்தை ஊதி தள்ளி இந்திய அணி அபார வெற்றி - போட்டியில் நிகழ்ந்த 5 சாதனைகள் இதோ.!
இங்கிலாந்தை ஊதி தள்ளி இந்திய அணி அபார வெற்றி - போட்டியில் நிகழ்ந்த 5 சாதனைகள் இதோ.!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேர்ஸ்டோ, ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் போன்ற பலமிக்க வீரர்களுடன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் பும்ராவின் புயல் வேகத்தில் அந்த அணி சீட்டுக்கட்டு போல சரிந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷமியுன் தன்னுடைய பங்கிற்கு 3 விக்கெட் சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் துவக்கம் முதலே பொறுப்பாக விளையாடினர். தவான் தடுப்பாட்ட யுக்தியை கையில் எடுத்து விளையாட, ரோகித் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர்களாக குவிக்கத் துவங்கினார். இங்கிலாந்து பவுலர்களால் இவர்களை எவ்வளவோ முயன்றும் பிரிக்க முடியவில்லை. அரைசதம் கடந்த ரோகித் உதவியுடன் இந்திய அணி 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 5 சிக்ஸர் உட்பட 76 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட முக்கியமான 5 சாதனைகள் இதோ.!

1. பூம் பூம் பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சு:

இந்த போட்டியில் 7.2 ஓவர்கள் மட்டுமே வீசிய பும்ரா 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், லிவிங்ஸ்டன், டேவிட் வில்லி என பெருந்தலைகளை வீழ்த்திய பும்ரா கடைசியாக பிரைடன் கார்ஸ் விக்கெட்டையும் சாய்த்து தனது மிகச் சிறந்த பந்துவீச்சை முடித்தார். வெறும் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது ஒருநாள் போட்டியின் மிகச்சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

2. மிக வேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி:

இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் கிரேக் ஓவர்டன் ஆகிய மூவரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது ஷமி. இதன் மூலம் ஒருநாள் போட்டியில் மிக வேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். 80 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஷமி. இதற்கு முன்னதாக அஜித் அகர்கர் 97 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி இருந்தார்.

3. இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் மிக மோசமான ஸ்கோர்:

இங்கிலாந்து ஆல் அவுட் ஆன 110 ஸ்கோர் ஆனது இந்தியாவுக்கு எதிரான அந்த அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். இந்தியாவுக்கு எதிரான அவர்களின் முந்தைய குறைந்த பட்ச ஸ்கோர் அக்டோபர் 2006 இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆகும். சொந்த மண்ணில் 10 வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்திப்பது இங்கிலாந்திற்கு இதுவே முதல்முறை.

4. இங்கிலாந்து மண்ணில் அதிக அரைசதம் கண்ட வெளிநாட்டு வீரர்:

இப்போட்டியில் தனது 44வது அரைசதம் அடித்தார் ரோகித் ஷர்மா. இதன்மூலம் இங்கிலாந்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் விளாசியவர் (14) என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ராகுல் டிராவிட், விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் (தலா 13 அரைசதங்கள்) ஆகியோர் 2 ஆம் இடத்தில் உள்ளனர்.

5. அனைத்து விக்கெட்டுகள் வீழ்ந்தது வேகப்பந்து வீச்சாளர்களிடமே!

இங்கிலாந்து இன்று வேகப்பந்து வீச்சாளர்களிடம் தான் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது., இந்தியாவுக்கு இது புதிய சாதனையாகும். முதலில் பவுலிங் செய்து எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்துவது இந்தியாவுக்கு இது முதல்முறை! முன்னதாக இச்சாதனை 5 முறை நிகழ்த்தப்பட்ட போது இந்தியா 2வதாக பவுலிங் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com