Published : 12,Jul 2022 10:45 PM

"குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்து விடும்" - பிரதமர் மோடி எச்சரிக்கை

Shortcut-Politics-Can-Destroy-Nation-Lead-To-Short-Circuit-PM-Modi-At-Deoghar-Jharkhand

குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்து விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியில் உள்ளார். இம் மாநிலத்தில், தியோகர் விமானநிலையம் உட்பட 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை தொடங்கி வைத்தார். இதற்காக தியோகர் நகர் வந்த அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் தியோகரில் உள்ள பாபா பைத்யநாத் கோவிலில், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து தியோகர் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்துவிடும். இந்த குறுக்குவழி அரசியலில் இருந்து எப்போதும் விலகி இருங்கள். குறுக்கு வழி அரசியல் நாட்டையே பாதகமான வழிக்கு கொண்டுசென்று விடும். இந்த  அரசியல் நாட்டிற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.

தேர்தல் நேரத்தில் கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து, குறுக்குவழிகளைக் கடைப்பிடித்து மக்களின் வாக்குகளைப் பெறுவது மிகவும் எளிதானது. இலவசங்களை தருவதாக வாக்குறுதி அளிக்கும் எதிர்க்கட்சிகளால், புதிய விமான நிலையங்களையோ, மருத்துவமனைகளையோ, நெடுஞ்சாலைகளையோ கட்ட முடியாது. இலவசங்களால் ஒருபோதும், புதிய விமான நிலையத்தையோ அல்லது புதிய மருத்துவக் கல்லூரியையோ அமைக்கவும் முடியாது.

இலவசங்களை அள்ளிக் கொடுத்தால், நீங்கள் எப்படி புதிய விமான நிலையங்கள் அல்லது சாலைகளை உருவாக்க முடியும்?. நாட்டின் மிகவும் வளர்ச்சியடையாத மற்றும் பணப்பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில், காங்கிரஸ் மற்றும் லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள ஆதரவைக் கொண்ட முதல்வர் ஹேமந்த் சோரன் பல மானியங்களை அறிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசைப் போலவே, ஜார்க்கண்டிலும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியைத் தவிர, இந்த இலவசம் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. ஜார்க்கண்டில் இலவச மின்சாரம் வழங்குவது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இலவச மின்சாரம் தலைநகர் டெல்லி அல்லது பஞ்சாப் போன்ற பணக்கார மாநிலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், ஜார்கண்ட் மாநிலம் அத்தகைய மானியங்களை கொடுக்க முடியாது என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக தியோகர் நகருக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. முன்பெல்லாம் ஒரு மாநிலத்தில் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால், அதன்பிறகு இரண்டு அல்லது மூன்று அரசாங்கங்களுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டன. மேலும் இரண்டு அல்லது மூன்று அரசாங்கங்களுக்கு பின்னர் பணிகள் துவங்கப்பட்டு, பல அரசாங்கங்களுக்குப் பிறகுதான் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

ஆனால் அதனை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். புதிய திட்டங்களுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டும்போது, வேலை, அரசியல் கலாச்சாரம் மற்றும் ஒரு நிர்வாக மாதிரியை கொண்டு வந்துள்ளோம். அதன்படி, இங்கே அடிக்கல் நாட்ட வந்துள்ளேன். இந்தியா ஆன்மீகம், பக்தி மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. யாத்திரைகள், நம்மை சிறந்த தேசமாகவும், சமுதாயமாகவும் மாற்றியுள்ளது. இங்கு சிவன் மட்டும் இல்லை, சக்தியும் இருக்கிறது. தியோகர் நகரில் ஜோதிர்லிங்காவும், சக்தீ பீடமும் உள்ளது. நீண்ட தூரங்களில் இருந்து லட்சகணக்கான மக்கள் தியோகர் நகருக்கு வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எனினும் பிரதமர் மோடி, ஹேமந்த் சோரன் அரசாங்கத்தை நேரடியாகத் தாக்குவதைத் இந்தக் கூட்டத்தில் தவிர்த்தார். ஏனெனில் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு, சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்களிக்கும் வகையில் உறவுகளை பேணுவதற்காக அவர் நேரடியாக தாக்குவதை தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்