Published : 10,Jul 2022 06:23 PM

ஜி-பேவால் சிக்கிய கொலையாளிகள்.. கிணற்றில் இருந்து இரும்புக்கடை உரிமையாளர் சடலம் மீட்பு

3-more-arrested-in-Iron-shop-owner-murder-at-Perambalur

பெரம்பலூரில் இரும்புக்கடை உரிமையாளரை கொலைசெய்து கிணற்றில் வீசிய சம்பவத்தில் நேற்று போலீஸார் இருவரை கைது செய்திருந்த நிலையில், இன்று மேலும் ஒரு பெண் உட்பட மூன்று பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு மல்லிகை நகரில் வசித்துவருபவர் ஜெகராமின் மகன் பரத்குமார் என்ற பகடுராம் (வயது 35). ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் வடக்கு மாதவி ரோட்டில் சொந்தமாக இரும்புக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 6ஆம் தேதி இரவு கடையில் இருந்த பகடுராம் ஊழியர்களிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான பகடுராமை தேடி வந்தனர்.

image

இந்த நிலையில் சந்தேகப்படும்படியாக பரத்குமார் செல்போனில் ஜி பே மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வந்தது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரத்குமாரை யாரேனும் பணத்துக்காக கடத்தி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பரத்குமாரின் செல்போனில் ஜி பே மூலம் அரியலூர் மாவட்டம் மேலபழூரைச் சேர்ந்த சரவணனின் மகன் சஞ்சய் ரோஷன் (19) என்பவருக்கு அதிக தொகை அனுப்பப்பட்டிருந்ததால், அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

image

விசாரணையில், அந்த பணத்தை பெரம்பலூர் - ஆலம்பாடி ரோடு ஆறுமுகத்தின் மகன் கமல் (25), திருநகரை சேர்ந்த சூரியின் மகன் கார்த்தி (27) ஆகியோர் வேறோருவரின் ஜி பே மூலம் தனக்கு அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து கமல், கார்த்தியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 2 பேரும் பரத்குமாரை கொலைசெய்து உடலை மோட்டார் சைக்கிளுடன் கட்டி பெரம்பலூர்-எளம்பலூர் செல்லும் சாலையில் உப்போடை காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசியதாகக் கூறினர்.

image

இதையடுத்து போலீசார் நேற்று மதியம் உப்போடை காட்டுப்பகுதியில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றுக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மோட்டார் சைக்கிளுடன் பரத்குமாரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக கமல் கார்த்தி இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்துவந்தனர்.

இந்நிலையில் இன்று கமலின் மனைவி நித்யா, சஞ்சய்ரோஷன், பரதன்ராஜ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்