Published : 09,Jul 2022 06:06 PM

‘இனவாதம் பேசி அதிபரான கோட்டாபய ராஜபக்ச’- அதிபர் மாளிகையில் நுழைந்தது முதல் தப்பியது வரை

rise-and-fall-of-srilankan-president-gatapaya-rajapakse

இலங்கை பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டை கலவர பூமியாக மாற்றி வருகிறது. மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கையில் உயர் பதவியை வகித்தவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதும், தப்பியோடுவதும் தொடர் கதையாக மாறியுள்ளது. அதன் முத்தாய்ப்பாக, இலங்கையில் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்த அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இன்று உயிருக்கு பயந்து தப்பியோடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 'இந்தியப் பெருங்கடலின் சொர்க்கம்' என ஒருகாலத்தில் வர்ணிக்கப்பட்ட இலங்கை, இன்று பற்றி எரிவதற்கான காரணம் என்ன? மக்கள் போராட்டத்தின் விளைவாக அங்கு என்னென்ன நடந்திருக்கிறது என்பது குறித்து இங்கு காண்போம்.

நவம்பர் 2019:  இலங்கை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ச அந்நாட்டின் அதிபராக பதவியேற்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தியவர் என்பதால் இவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்தது. எப்படி இனவாதத்தை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டாரோ, அதுபோலவே பதவியில் அமர்ந்த பிறகும் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் இனவாதத்தை தூண்டி அரசியல் செய்வதிலேயே குறியாக இருந்தார் கோட்டாபய ராஜபக்ச என சொல்லப்படுகிறது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் சரியத் தொடங்கியது.

image

மே 2020: கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இலங்கையின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலா துறை கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனால் ஏற்கெனவே நலிவடைந்து வந்த இலங்கை பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டது. இந்த சமயத்தில்தான், சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை இலங்கை கடன் வாங்க தொடங்கியது. இவ்வாறு கடன் பெற்ற போதிலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளால் அந்நாட்டின் நிதி நிலைமை மேலும் மோசமடைந்தது. சிறிது சிறிதாக பெறப்பட்ட இந்த கடன் தொகை, ஒருகட்டத்தில் 7 பில்லியன் டாலராக (ரூ.55 ஆயிரம் கோடி) மாறியது. இதேபோல, உலக வங்கி உள்ளிட்ட பிற நிதி அமைப்புகளிடம் இருந்தும் பெறப்பட்ட பல ஆயிரம் கோடி தொகையை திருப்பி தர முடியாமல் திணறியது இலங்கை அரசு.

ஏப்ரல் 2021: கடன் மேல் கடன் வாங்கியதாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளை கையில் எடுத்ததாலும் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 3.6 சதவீதமாக சரிந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு, முதன்முறையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியிருப்பதை இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஆகஸ்ட் 2021: பொருளாதார நெருக்கடி அதிகரித்ததால் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இதனைக் கட்டுப்படுத்த உணவு அவசரநிலையை அதிபர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்தார்.

டிசம்பர் 2021:  இலங்கையில் பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததால் உணவுப் பொருட்கள், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. ஏழை, நடுத்தர மக்கள் மூன்று வேளை சாப்பிடுதவற்கு கூட உணவு இல்லாத நிலை ஏற்பட்டது. இது இலங்கை மக்களை கொதிப்படைய செய்தது.

மார்ச் 2022:  இலங்கை முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதிக்க தொடங்கினர். இலங்கை பொருளாதாரத்தை மீட்க தவறிய இலங்கை அரசை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

image

ஏப்ரல் 2022: மக்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததால் இலங்கை அரசாங்கம் ஆட்டம் காண தொடங்கியது. மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த அவசர நிலையை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்தார். போராட்டக்காரர்களை ஒடுக்கும் சர்வ அதிகாரமும் ராணுவத்துக்கு வழங்கப்பட்டது. இதனால் ராணுவத்துக்கும், மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. தங்கள் வாழ்வாதாரத்தையே பறிகொடுத்துவிட்டு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலையில் போராடிய மக்களின் முன்பு இலங்கை ராணுவத்தின் அடக்குமுறை தோற்றுப்போனது. அரசு அலுவலகங்கள், ரயில்கள், பேருந்துகள் சூறையாடப்பட்டன. இலங்கையில் பல அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

image

மே 2022: இலங்கை மக்களின் கோபம் அரசாங்கத்துடன் நின்றுவிடாமல், ராஜபக்ச குடும்பத்தினர் மீதும் திரும்பியது. தங்களை வறுமையில் தள்ளிவிட்டு செல்வ செழிப்புடன் வாழும் ராஜபக்ச குடும்பத்தினரை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரும் தலைமறைவானார். ஆனாலும் அவருக்கு எதிரான மக்கள் போராட்டம் ஓயாததால் இறுதியில் தனது பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக எதிர்க்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து பலர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஜூன் 2022: புதிதாக அமைந்துள்ள அமைச்சரவை நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கும் என இலங்கை மக்கள் பொறுமைக் காத்தனர். தங்கள் போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிட்டிருந்தனர்.

image

ஜூலை 2022: இந்நிலையில், இலங்கை பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, மக்கள் மீண்டும் போராட்டக் களத்திற்து திரும்பினர். இந்த முறை அவர்களின் குறி இலங்கை அதிபர் கோட்டாபய  ராஜபக்சவாக  இருந்தது. அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான மக்கள், ஒருகட்டத்தில் மாளிகைக்குள் நுழைந்தனர். இதுவரை அரசாங்கத்தின் பக்கம் இருந்த காவல்துறையினரின் ஒரு பகுதியினர், இப்போது மக்களின் பக்கம் திரும்பினர். போராட்டக்காரர்களுடன் காவல்துறையினரும் சேர்ந்து கொண்டதால் போராட்டம் கைமீறி சென்றது. சிறிது தாமதித்தால் கூட குடும்பத்தினருடன் உயிரை விட நேரிடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அதிபர் மாளிகையில் இருந்து குடும்பத்துடன் தப்பியோடியுள்ளார் கோட்டாபய ராஜபக்ச

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்