Published : 08,Jul 2022 10:44 AM

வெறித்தனம், நிதானம் - கங்குலியின் மறக்க முடியாத அந்த 5 ஆட்டங்கள்

Happy-Birthday-Sourav-Ganguly-Top-Batting-Performances-by-Indian-Cricket-Legend

90களில் பிறந்த பலருக்கும் சவுரவ் கங்குலிதான் இன்றும் என்றும் ஃபேவரைட் கேப்டன். 'தாதா' என கொண்டாடப்படும் கங்குலி, இன்று தமது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் கங்குலியின் கிரிக்கெட் பயணத்தில் மறக்கமுடியாத 5 போட்டிகளை பார்க்கலாம்.

அறிமுக போட்டியிலேயே சதம்

1996ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆடியது. இந்த போட்டியில்தான் இந்திய அணிக்காக சவுரவ் கங்குலி அறிமுகமானர். அறிமுகமாகியபோது இந்திய அணியின் முகத்தையே இவர் மாற்றப்போகிறார் என்று நிச்சயம் இந்திய ரசிகர்கள் யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். சச்சின் டெண்டுல்கர் 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஒன் டவுன் வீரராக களமிறங்கிய கங்குலி தனி ஆளாக போராடினார். அவருக்கு அதே போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ராகுல் டிராவிட் அற்புதமான ஒத்துழைப்பு அளித்தார். மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கங்குலி தனது முதல் சதத்தை விளாசினார். இந்த போட்டியில் கங்குலி 301 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டரியுடன் 131 ரன்களை விளாசினார். தன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி அசர வைத்ததோடு மட்டுமின்றி, அந்த போட்டியில் பந்துவீச்சாளராகவும் கங்குலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

image

தெ.ஆ. பவுலர்களை பதம்பார்த்த கங்குலி

கடந்த 2000ம் ஆண்டு நைரோபியில் நடந்த ஐசிசி நாக் அவுட் கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் கங்குலி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம்பார்த்தார். கிடைத்த பந்துகளை எல்லாம் பறக்கவிட்ட கங்குலி, 12 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 141 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது சதத்தின் துணையுடன் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 295 ரன்களைக் குவித்தது. அப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

image

அதிகபட்ச ஸ்கோர்

கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 61 ரன் எடு‌ப்பத‌ற்கு‌ள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அ‌ணி தடுமாறி கொண்டிருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த கங்குலியும், யுவராஜ் சிங்கும் அதிரடியாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிதறடித்து பவுண்டரிகளாக விரட்டிய கங்குலி 239 ர‌ன்கள் (30 பவுண்டரி, 2 சிக்ஸர்) கு‌வி‌த்து ஆ‌ட்‌ட‌மிழ‌ந்தா‌ர். இது அவரது முதல் இரட்டை சதம் மற்றும் அவரது டெஸ்ட் கெரியரில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

image

நியூசிலாந்துக்கு எதிராக 153*

1999இல் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  3-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி திணறி வந்தது. கங்குலியை மற்ற அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். தனி ஒருவனாக தாக்குப்பிடித்து ஆடிய கங்குலி 153 (நாட்-அவுட்) ரன்கள் குவித்தார். இதனால் இந்தியா 261 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியதுடன், தொடரை 2-1 என இந்தியா வென்றதற்கு கங்குலி முக்கிய காரணமாக அமைந்தார்.

image

விமர்சனங்களை தகர்த்த ‘தாதா’   

2001இல் கங்குலியின் பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரிய நிலையில் இருந்தது. அச்சமயத்தில் அவர் கடந்த 13 இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அப்போது நடந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இந்தியா, இரண்டாவது போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடிக் கொண்டிருந்தது. முத்தையா முரளிதரனின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. 91 ரன் எடு‌ப்பத‌ற்கு‌ள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தினார் கங்குலி. 98 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் வெற்றிக்கு அழைத்துச் சென்றதுடன், தனது பேட்டிங் ஃபார்ம் குறித்ததான விமர்சனங்களையும் தகர்த்தார் கங்குலி.

இதையும் படிக்கலாமே: 'யார எப்படி வழிநடத்தனும்னு தெரிந்திருந்தார் கங்குலி' - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்