Published : 05,Jul 2022 05:23 PM

திமுகவுடன் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு?.. வீரியத்தோடு எதிர்க்கும் இபிஎஸ் - சாதக, பாதகம் என்ன?

திமுகவுடன் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு குறித்து வீரியத்தோடு எதிர்க்கும் இபிஎஸ்-ன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த விரிவான பார்வை இங்கே:

சமீபத்தில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு-வை ஆதரிப்பதற்கான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பங்கேற்றனர். அதில், அதிமுக தரப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பங்கேற்றிருந்தனர். இபிஎஸ் அந்தக் கூட்டத்தில் பேசும்போது, `சமூகநீதி பேசக்கூடிய திமுக ஏன் திரௌபதி முர்மு-வை ஆதரிக்கவில்லை?” என்று கேட்டார். மேலும் `திராவிட மாடல், சமூகநீதி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, திமுக மக்களை ஏமாற்றுகிறது’ என்று கொஞ்சம் காட்டமாகவே பேசினார். இதற்கு திமுக தரப்பில் இருந்து டிஆர்.பாலு கிட்டத்தட்ட ஒண்ணேகால் பக்கத்துக்கு அதைவிட காட்டமாக பதிலடி கொடுத்தார்.

image

டி.ஆர்.பாலுவின் அந்த அறிக்கையில், `அதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்பதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு சில தயக்கங்கள் இருக்கு. குறிப்பாக ஜெயலலிதா இருந்த பொதுச் செயலாளர் பொறுப்பில் எப்படி, தான் அமர்வது என யோசிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அத்தோடு, இந்த பதவிக்காக கோடிக்கணக்குல பணம் செலவுபண்றது எப்படி என்பதிலும் அவருக்கு சில தயக்கங்கள் இருக்கு. மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள எப்படி விலைக்கு வாங்கலாம் என்பது குறித்தும் அவர் ஆலோசனை நடத்திக்கிட்டு இருக்காரு. அப்படியிருக்க அவர் எங்களுக்கு சமூகநீதி பாடம் எடுக்க வேண்டியதில்லை’ என்று குறிப்பிட்டிருக்கார்.

இவற்றுடன், கடந்த காலங்களில் கே.ஆர்.நாராயணன், மீராகுமாரி போன்றவர்களுக்கெல்லாம் எப்படி திமுக ஆதரவு கொடுத்தது, அவங்க குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக போட்டியிட்ட போது அவர்களை ஆதரித்து தேர்ந்தெடுத்த வரலாறு என்ன என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் டி.ஆர்.பாலு.

image

இந்த விஷயத்தில், நாம் ரொம்ப முக்கியமாக கவனிக்க வேண்டியது இபிஎஸ்-க்கு எதிராக மிகக் காட்டமாக திமுக கொடுத்திருக்கும் அறிக்கையைதான். ஏனெனில் அந்த அறிக்கை வழியாக நாம் கவனிக்க வேண்டியது, திமுக ஓபிஎஸ் ஆதரவு நிலையில் இருக்கிறது. ஆம், திமுகவுக்கு ஆதரவாகவும் சார்பாகவுமே டி.ஆர்.பாலுவின் அந்த திமுக தரப்பு விளக்கம் இருந்தது. இந்த அறிக்கையினால், ஏற்கெனவே இருக்கக் கூடிய திமுக அதிமுக எதிர்ப்பு மட்டுப்படுகின்றது என்பதை நாம் உணரலாம். இவற்றையெல்லாம் யூகித்தே, ஓபிஎஸ் - திமுக கூட்டு நிலைப்பாடு தொடர்பாக இபிஎஸ் தரப்பில் தொடர்ந்து இன்றுவரை முன் வைத்து வருகின்றனர்.

திமுக - ஓபிஎஸ் இடையேயான இந்த கூட்டு நிலைபாட்டை இபிஎஸ் தரப்பு இவ்வளவு உறுதியாக குற்றச்சாட்டாக முன்வைக்க, இரண்டு சம்பவங்களை இபிஎஸ் தரப்பு சொல்கின்றனர். முதலாவதாக சட்டசபையில் கருணாநிதியின் நினைவிடம் அமைப்பதற்கான தீர்மானத்தின் மீது ஓபிஎஸ் பேசியது. அவர் அப்போது, `எங்க அப்பா தீவிரமான கருணாநிதி பக்தர். அவருடைய பெட்டிக்குள்ள கலைஞருடைய பராசக்தி வசன புத்தகம் இருக்கும்’ என்றார்.

image

அடுத்த சம்பவமாக இருப்பது, பொதுக்குழு நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு ஓ.பி.ரவீந்திரநாத், முதலமைச்சரை பார்த்துவிட்டு வெளியே வருகிறபோது, `மக்கள் நலனில் முதலமைச்சருக்கு ரொம்ப ஆர்வம் இருக்கு அக்கறை இருக்கிறது’ என பேட்டி கொடுத்தது. இச்சம்பவங்களைத்தான் இபிஎஸ் தரப்பினர் சுட்டிக்காட்டுறார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இப்போது மட்டுமில்லை. ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்து, பின் சசிகலா அந்த பொறுப்பை அவரிடமிருந்து வாங்கும்போதும் இதே `திமுக கூட்டணி’ குற்றச்சாட்டுதான் அவர்மீது வைக்கப்பட்டது. அந்த நேரத்தில், `சட்டமன்றத்தில் ஓபிஎஸ் ஸ்டாலினுடன் சிரித்து பேசுகிறார்’ என்ற விஷயமும் அப்போது பூதாகரமானது.

சொல்லப்போனால் இந்த `திமுகவோடு நெருக்கம்’ என்ற குற்றச்சாட்டு அடிப்படையில்தான் சசிகலா ஓபிஎஸ்ஸிடமிருந்து முதலமைச்சர் பொறுப்பை திரும்பப்பெற்றார். அதன்பின் இப்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திமுகவுக்கும் ஓபிஎஸ்-க்குமான சார்பு நிலையை சுட்டிக்காட்டி இபிஎஸ் தரப்பு பேசத் தொடங்கியிருக்கார்கள். குறிப்பாக`ஓபிஎஸ்-க்கும் அவரது மகனுக்கும் ஏதோ சுயநலம் இருக்கிறது’ என்று இபிஎஸ் தரப்பில் அதிகம் கூறப்படுகிறது.

image

அரசியல் களத்தை பொருத்தவரைக்கும், இதுநாள்வரை அதிமுக திமுக எதிர்ப்பு அரசியல்தான் இரு கட்சிகளுக்குமே இது பலன் கொடுத்திருக்கிறது. ஒருமுறை அதிமுக, மறுமுறை திமுக என்று மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு தொண்டர்களிடம் இருக்கக்கூடிய எதிர்ப்பு மனநிலைதான் கைகொடுத்திருக்கிறது. அதுதான் அவர்களின் அரசியல் செய்வதற்கும் பயன்பட்டிருக்கிறது. இதில் ஒரு கட்சியை சேர்ந்தவர் இன்னொரு கட்சியோட ஆதரவு நிலையில இருக்கிறார் - சார்பு நிலையில இருக்குறார் என்பது இந்த கட்சியை பலவீனப்படுத்தக் கூடியதாக பார்க்கப்படும். இதுவே இபிஎஸ் தரப்பை கோபப்படுத்தியிருப்பதாக கணிக்கப்படுகிறது.

இக்காரணம் மட்டுமன்றி தமிழக அரசியல் களத்தில், தேர்தலில் வெற்றிப்பெற்று திமுக ஆட்சிக்கு வந்த நாள் தொடங்கி, அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேதான் வருகின்றனர். சொல்லப்போனால் `திமுக-வை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்ற வேண்டும்’ என்ற முனைப்போடு செயல்படுகின்றனர். அப்படியிருக்க நிலையில், `திமுக நன்றாக ஆட்சி செய்கிறது. அவர்கள் மக்கள் நலனில் அக்கறையோட இருக்கிறது’ என்று அதிமுக தரப்பிலிருந்தே ஒருவர் (ஓ.பி.ரவீந்திரநாத் கூறியது) சொன்னால், பின் அதிமுக எப்படி, எப்போதான் ஆட்சிக்கு வருவது என்பதே இபிஎஸ் தரப்பின் கேள்வி.

image

இப்படி ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டை முன்வைப்பதிலும், திமுக மீது கடுமையான சாடல்களையும் முன்வைப்பதில் யாருக்கு லாபம், இதில் யார் தீவிரமாக செயல்படுகின்றார் என்று ஆராய்ந்தால், இபிஎஸ்தான் வீரியத்தோடு செயல்படுகிறார் என்றே பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் இதுபோன்ற செயல்கள், அரசியல் ரீதியாக அவருக்கு கூடுதல் லாபம் கொடுக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இந்த மாதிரியான காய் நகர்த்தல்கள் அரசியல் ரீதியாக இபிஎஸ்-க்கு கைகொடுக்கும் என்பதுதான் கூடுதல் சாத்தியக் கூறுகளாக இருக்கிறது.

- கார்த்திகேயன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்