Published : 04,Jul 2022 06:18 PM

Real time fashion… டெக்ஸ்டைல் தொழிலைத் தலைகீழாகப் புரட்டப் போகிறதா?

Is-Real-time-fashion-going-to-turn-the-textile-industry-upside-down-

சாரா, ஹெச் & எம், லுயிஸ் வுட்டன், ஹெர்மெஸ், லெவி ஸ்ட்ராஸ்... போன்ற நிறுவனங்களைக் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கொஞ்சம் வசதியான ஆட்களாக இருந்தால் இந்த நிறுவன ஆடைகளை வாங்கி இருப்பார்கள். இது போன்ற பிரமாண்ட நிறுவனங்கள் தான் அடுத்த பல தசாப்தங்களுக்கு ஆடை துறையில் அரசாட்சி செய்யும் என நீங்கள் கருதினால்... சாரி ப்ரோ/சிஸ். நீங்கள் பிசினஸ் உலகில் பூமர் அங்கிள் / ஆன்டியாக இருக்கிறீர்கள்.

மேலே குறிப்பிட்ட உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இன்றைய ஃபேஷன் உலகின் கடைசி கன்னியாக தொக்கி நிற்கின்றன என்கிறது சி என் பி சி ஊடகம். அப்படி என்றால் சாரா போன்ற ராட்சத பிராண்டுகளுக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் அல்லது வியாபார யுக்திகள் என்ன? அவை உண்மையாகவே ஆடை உலகை தலைகீழாக மாற்றுமா? Speed is the God, Time is the evil என வணிக உலகில் ஒரு சொல்லாடலைக் கேட்டிருப்பீர்கள். இன்றைய கின உலகில் வேகம் தான் எல்லாம். அதே வேகம் தான் ஹெச் & எம், சாராவை ஃபேஷன் ஆடை உலகில் பின் சீட்டுக்குத் தள்ளியுள்ளது. எப்படி எனப் பார்ப்போம்.

image

ஃபேஷன் உலகில் ஒரு நிறுவனம் எப்படி காசு பார்க்கும்?

ஒரு ஆடை வடிவமைப்பாளர், ஒரு யோசனையை முன்வைத்து, அதை முறையாக உற்பத்தி செய்து நிறுவனத்தின் பெரிய அதிகாரிகளின் முன்னிலையில் விளக்குவார். அந்த ஆடை சந்தையில் அதிகமாக விற்கும், கம்பெனிக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதி செய்து கொள்ளும். அதன் பிறகு தான் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடையை எந்தெந்த அளவுகளில் (xs, s, m, L, XL...) உற்பத்தி செய்யலாம் என முடிவு செய்து எந்திரங்களை மாற்றியமைப்பர். திட்டமிட்டபடி ஆலைகளில் நிதானமாக புதிய ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தரப் பரிசோதனைகள், மறுபரிசீலனைகள் செய்து, பிராண்டிங் விளம்பர பேக்கிங்களோடு நிறுவனத்தைவிட்டு புறப்பட பல மாதங்கள் ஆகும்.

இப்படி ஸ்கேல் வைத்து கோடு போட்டு, டிவைடரால் அளந்து, குர்தாவில் மேல் பட்டன் இருக்கலாமா வேண்டாமா என 3 மணி நேரம் விவாதித்து முந்திரி பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாதென சாரா போன்ற சில நிறுவனங்கள் 1990களில் தீர்மானித்தன. 500 மணி நேரத்துக்குள் புத்தம்புது டிசைனில் ஆடைகள் என ஒரு புதிய, அன்றைய தேதியில் ஃபேஷன் உலகத்தில் சாத்தியப்படாத அணுகுமுறையைக் கொண்டு வந்தது. இந்த 21 நாட்களுக்குள் மேலே கூறிய அனைத்து பணிகளும் நிறைவடைந்து, புதிய ஆடைகள் கடைகளில் கிடைக்க வேண்டும் என்றது. அதை செயல்படுத்தி வெற்றியும் பெற்றது சாரா. இதை ஃபாஸ்ட் ஃபேஷன் (Fast Fashion) என்றனர்.

image

இதனால் ஃபேஷன் துறை மக்கள் மத்தியில் பரவலானது, பிரபலமானது. மிக முக்கியமாக வெகுஜன மக்களும் பிராண்டெட் ஃபேஷனை நோக்கி படையெடுக்கும் அளவுக்கு விலை குறைந்தது. பத்தல... பத்தல... வியாபாரம் பத்தல என அசோஸ் (Asos), பூஹூ (Boohoo) போன்ற பிரிட்டிஷ் நிறுவனங்கள் 2000களில் ஒரு புதிய யுக்தியை முன்வைத்தன.

நாங்கள் இணையத்தில் மட்டுமே கடை விரிப்போம். சாரா போன்ற தாதாக்கள் 3 வாரம் எடுத்துக் கொண்டு செய்த காரியங்களை, நாங்கள் ஒரு வாரத்தில் முடிப்போம். கஸ்டமர்களுக்கு வாராவாரம் ஆராவாரம் தான். ஜாலியாக வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் புதிய டிசைனில் வெளிவரும் டிரெண்டியான ஃபேஷன் ஆடைகளை வாங்கலாம் என்றது. இதை அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபேஷன் (Ultra Fast Fashion) என்கின்றனர். இந்த யோசனையும் அலாதியாக வெற்றி பெற்றது. இந்த இரண்டு நிறுவனங்களும் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகின்றன.

அசோஸ், பூஹு போன்ற இளந்தாரிக் கம்பெனிகளை சமாளித்து சாரா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்குள், தற்போது ஷியன் (Shein) என்கிற புதிய சீன நிறுவனம் அசோஸ் 7 நாட்களில் செய்யும் வேலையை 3 நாட்களில் செய்கிறேன் என களமிறங்கியது. இதை ரியல் டைம் ஃபேஷன் (Real Time Fashion) என்கிறார்கள். இதில் ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால், ஷியன் சீன வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், சீனா உற்பத்தி மையமாகவும், வெளி உலகத்தை சந்தையாகவும் வைத்து இயங்கி வருகிறது. தர்போதைக்கு இந்தியாவில் ஷியன் வலைதளத்தில் ஆர்டர் செய்ய முடியவில்லை.

image

சமீபத்தைய நிலவரப்படி, நாள் ஒன்றுக்கு 3,000 - 4,000 புதிய பெண்களளுக்கான ஆடைகளை ஷியன் நிறுவனம் தன் வலைதளத்தில் விற்பனைக்காக பதிவேற்றுகிறது என டேவ் க்ஷி என்கிற பகுப்பாய்வாளர் சி என் பி சியிடம் கூறியுள்ளார். $2 டாலரில் இருந்து ஷியன் வலைதளத்தில் பொருட்களை வாங்க முடியும் என்றால் அது எப்படி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என கணக்கிட்டுக் கொள்ளுங்களேன்.

மற்ற எந்த ஃபேஷன் நிறுவனத்தை விட அதிவேகமாக, அதிக எண்ணிக்கையில் புதிய டிசன் ஆடைகள் ஷியன் வலைதளத்தில் விற்பனைக்கு பதிவேற்றப்படுவதாக சி என் பி சி ஊடகத்திடம் கூறுகிறார் வணிக ஆலோசகர் அலிசன் மல்ஸ்டென். கடந்த 2022 ஏப்ரலில் ஷியனின் மதிப்பீடு 100 பில்லியன் டாலரைக் கடந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது சாரா மற்றும் ஹெச் & எம் நிறுவனத்தை ஒன்றாகச் சேர்த்தால் கூட வராத மதிப்பீடு என்கிறது சி என் பி சி செய்தி ஒன்று.

எப்படி இயங்குகிறது?

வாடிக்கையாளர்களின் தரவுகளை வைத்து, என்ன மாதிரியான ஆடைகளை அதிகம் வாங்குகிறார்கள், எப்போது வாங்குகிறார்கள் போன்ற அடிப்படைத் தரவுகளைக் கடந்து, ஒரு ஆடையைப் பார்க்கும் வாடிக்கையாளர் எந்த இடத்தில் அதை வாங்குகிறார் அல்லது வெளியேறுகிறார்... என மிக நுணுக்கமான பல தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது ஷியன். இது போக கூகுள், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருக்கும் ஃபேஷன் தொடர்பான தரவுகளை ஷியன் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தரவுகள் அடிப்படையில் ஒரு ஃபேஷன் டிரெண்ட் உருவாகும் காலத்திலேயே, அதை ஆடையாக வடிவமைத்து நறுக்கென தன் தளத்தில் இறக்குவதாக டேவ் க்ஷி.

image

உலக அளவில், சீனா அதிவேகமாக ஆடைகளைத் தயாரிக்கும் துறையில் ஒரு தெளலத்தாக இருந்து வருகிறது. எனவே ஷியன் கூறும் ஃபேஷன் டிசைன் ஆடைகளை அவர்களின் வேகத்துக்கு சீனாவிலேயே சட்டென தயாரிக்க முடிந்தது. ஒரு உதாரணத்துக்கு, சாரா போன்ற பெரிய ஜாம்பவான்கள் ஒரு நாளில், ஒரு டிசைனில் 1,00,000 ஆடைகளைத் தயாரிக்கிறார்கள் என்றால், ஷியன் பல தரப்பட்ட 50 வெவ்வேறு டிசைனில், தலா 2,000 ஆடைகளைத் தயாரிக்கிறது.

ஆடைகளை நேரடியாக மக்களிடம் விற்கப்படுவதால் இறக்குமதி வரி, சுங்க வரி போன்ற பிரச்சனைகளை அனாயாசமாகக் கடந்து, பல கோடி டாலர் லாபம் பார்க்கிறது ஷியன். 2020ஆம் ஆண்டில் $9.8 பில்லியன் டாலராக இருந்த ஷியனின் விற்பனை, 2021ஆம் ஆண்டில் $15.7 பில்லியனாகவும் அனல் பறந்துள்ளது. சுருக்கமாக கொரோனா காலத்திலும் கல்லாகட்டியுள்ளது ஷியன்.

பிரச்னைகள்

இத்தனை அதிவேகமாக வளர்ந்து வரும் ஷியன் மீது, இணையத்தில் ஏகப்பட்ட திருட்டு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சிறு நிறுவனங்களின் டிசைன்கள், தனி மனிதர்களின் ஆடை வடிவமைப்புத் திட்டங்கள் தொடங்கி லெவிஸ் வரை பல ஆடை வடிவமைப்புகள் சரமாரியாக திருடப்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

image

ஷியன் நிறுவனத்துக்கு ஆடைகளைத் தயாரித்துக் கொடுக்கும் விநியோகஸ்தர்கள் வாரத்துக்கு 75 மணி நேரம் (நாள் ஒன்றுக்கு 12.5 மணி நேரம்) வேலை வாங்காப்டுதாக கடந்த நவம்பர் 2021-லேயே பிபிசி வலைதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது.  

நிலைக்குமா ரியல் டைம் ஃபேஷன்?

1990களுக்கு முன்பு வரை இந்தியாவில் ஒருவர் கார் வாங்க வேண்டுமானால் உடனடியாக வாங்க முடியாது. பணம் செலுத்தி முன்பதிவு செய்து ஒரு சில மாதங்கள் காத்திருந்து வாங்க வேண்டும். ஆனால் இன்று பணத்தை செலுத்தி அடுத்த சில மணி நேரங்களை காரை டெலிவரிக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அந்த வேகம் எந்த தொழிலுக்கும் நல்லது தான். வாடிக்கையாளர்களும் அதைத் தான் விரும்புவர். எனவே ஆடை தொழிலில் ஷியன் போன்ற ரியல் டைம் ஃபேஷன் நிறுவனங்கள், காப்புரிமை மற்றும் டிசைன் திருட்டு போன்ற பிரச்சனைகளைக் கடந்து தங்கள் வியாபாரத்தை வளர்த்து எடுத்தால், ஒட்டுமொத்த ஆடை துறையும் ரியல் டைம் ஃபேஷனை நோக்கி ஓடோடி வருமென எதிர்பார்க்கலாம்.

அப்படி இல்லை என்றால், வேறு ஒரு பெயரில் அதிவிரைவாக ஆடை தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வரும்.

- கெளதம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்