தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!

தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 2004 இல் இந்திய அணியில் அறிமுகமானார். இன்னும் இந்திய ரசிகர்களின் விருப்பமான கேப்டனாக முன்னணியில் இருக்கிறார். டி20 உலகக் கோப்பை 2007, 50 ஓவர் உலகக் கோப்பை 2011, சாம்பியன்ஸ் டிராபி 2013 என ஐசிசி நடத்தும் மூன்று வகையான உலகக் கோப்பைகளையும் அவர் தனது கேப்டன்சியின் போது இந்தியாவுக்காகப் பெற்றார். எப்போதும் தனது அமைதியான “கூல்” கேரக்டருக்கு பெயர் பெற்றவர். ஆனால் அவரும் களத்தில் ஆவேசமடைந்து சர்ச்சையில் சிக்கிய தருணங்களும் உண்டு.

தோனியின் சர்ச்சையில் சிக்கிய அந்த டாப் 5 சம்பவங்கள் இதோ!

5. முஸ்தாபிசுர் ரஹ்மானுடன் மோதல்:

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, பந்துவீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானுடன் தோனி உடல் ரீதியாக மோதலில் ஈடுபட்டதாக சர்ச்சை வெடித்தது. எம்எஸ் தோனியின் மீது மோதியதில் முஸ்தாபிசுர் ரஹ்மான் நிலைகுலைந்து கீழே விழுந்தது சர்ச்சைக்கு காரணமானது.

இந்திய இன்னிங்ஸின் 25-வது ஓவரில், தோனி பந்தை மிட்-ஆஃப் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் எடுப்பதற்காக ஓடினார். முஸ்தாபிசுர் தோனி ஓடிக் கொண்டிருந்த பாதையை நோக்கிச் செல்வதற்கு முன், அவரைப் பார்த்ததாகத் தோன்றியது. இதற்கிடையில், தோனி, முஸ்தாபிசுர் ரஹ்மான் மீது சரமாரியாக மோதினார். தோனி தனது முன்கையால் ரஹ்மானை தள்ளினார்.

“மோதலை தவிர்க்க தன்னால் இயன்றவரை முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை” என்று தோனி பின்னர் கூறினார். ரஹ்மான் மற்றும் தோனி இருவரும் குற்றச்சாட்டை மறுத்த நிலையிலும் தோனிக்கு அப்போட்டிக்கான சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. முஸ்தாபிசுர் அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற போதும் அவருக்கும் அப்போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

4. உலகக் கோப்பையில் ராணுவ சின்னம் இடம்பெற்ற கையுறைகள்:

சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்தில், தோனி இராணுவ சின்ன அடையாளத்துடன் தனது கீப்பிங் கையுறைகளை அணிந்திருந்தார். ராணுவ பேட்ஜுடன் விளையாடியதற்காக தோனியை பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கடுமையாக விமர்சித்தார். தோனி அவ்வாறு பேட்ஜ் அணிய முடியாது என ஐசிசி தெளிவுபடுத்தியது.

இருப்பினும், தோனிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆதரவு கிடைத்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐசிசி தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சக் குழுவைக் கேட்டுக் கொண்டது. சர்ச்சை கடுமையாக எழுந்த போதும் பிசிசிஐ ஆதரவால் இவ்விவகாரத்தில் தோனி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

3. சீனியர் வீரர்களின் பீல்டிங் குறித்த விமர்சனம்

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் முத்தரப்பு தொடரில், தோனி கேப்டனாக சில விமர்சனங்களை முன்வைத்தார். அது சர்ச்சை புயலையே கிளப்பியது.  சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் கெளதம் கம்பீர் போன்ற வீரர்களின் பீல்டிங் தரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தோனி கூறினார். பெரிய பரிமாணங்களைக் கொண்ட மைதானங்களில் விளையாடுவதை இளம் வீரர்களுக்கு போதுமான அளவு வெளிப்படுத்த வேண்டும் என்று தோனி விரும்பினார்.

முன்னாள் கேப்டனும், அப்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான திலீப் வெங்சர்க்கரும் சிறந்த ஆடும் லெவனை களமிறக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான மனிந்தர் சிங், இந்த கொள்கையை "முழு முட்டாள்தனம்" என்று அழைத்தார். பின்னாளில் சேவாக் தோனி இப்படி பேசியதால் கோபமடைந்ததாக குறிப்பிட்டார்.

“முதல் மூன்று பேர் மெதுவான பீல்டர்கள் என்று ஆஸ்திரேலியாவில் எம்எஸ் தோனி கூறியதை ஊடகங்கள் மூலம் நாங்கள் அறிந்தோம். எங்களிடம் நேரடியாக அவர் இதனை தெரிவிக்கவில்லை” என்று சேவாக் கூறினார்.

2. கள நடுவர்களுடன் கடும் வாக்குவாதம் 

2012 இல், தோனி “கூல்” கேரக்டரை இழந்த மற்றொரு நிகழ்வு நடந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது இந்த சம்பவம் நடந்தது. பிரிஸ்பேனில் உள்ள கப்பாவில் நடந்த ஏழாவது ஒருநாள் போட்டியில், தோனி கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அது.

அப்போட்டியின் 29வது ஓவரில், சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் ஆஸி. பேட்டர் மைக் ஹஸ்ஸியை ஸ்டம்பிங் செய்தார் தோனி. கள நடுவர் அவுட் தர மறுக்கவே இந்திய அணி மூன்றாவது நடுவர் புரூஸ் ஆக்சன்ஃபோர்டிடம் ரிவியூ கேட்டது. ரீப்ளேக்களில் கோட்டுக்கு சற்றுப் பின்னால் இருந்த ஹஸ்ஸி, முதலில் “அவுட்” என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் ஹஸ்ஸி பெவிலியனுக்குச் சென்றபோது, கள நடுவர் பில்லி பவுடன் அவரைத் திரும்பக் கொண்டுவர விரைந்தார்.

பின்னர்தான் மூன்றாவது நடுவர் “நாட் அவுட்” என அழுத்துவதற்கு பதிலாக “அவுட்” என தவறான பொத்தானை அழுத்தியது தெரிய வந்தது. உடனடியாக பேட்ஸ்மேனைத் திரும்ப அழைக்கும்படி களத்தில் உள்ள நடுவர்களை கேட்டுக்கொண்டார். ஹஸ்ஸி மீண்டும் கிரீஸுக்குச் செல்லும் வழியில் சிரித்தார். ஆனால் தோனி மிகவும் ஆத்திரமடைந்தார். அந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. எந்த வகையிலும் நடுவர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தாத தோனிக்கு இந்த நிகழ்வுகளின் திருப்பம் பிடிக்கவில்லை. கள நடுவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

தொலைக்காட்சி வர்ணனையாளர்களான வாசிம் அக்ரம் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரும் அதன் வேடிக்கையான பக்கத்தைப் பார்க்க முடியவில்லை. “அங்கே இரண்டு பொத்தான்கள் உள்ளன. நீங்கள் அவற்றில் ஒன்றைத் அழுத்த வேண்டும், அதைச் சரியாகச் செய்ய முடியாதது ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அக்ரம் குறிப்பிட்டார். இறுதியில் ஹஸ்ஸி 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை அப்போட்டியில் வீழ்த்தி இருந்தது.

1. ஜெய்ப்பூரில் ஐபிஎல் நோ பால் சர்ச்சை

ஐபிஎல் 2019 இல், தோனி வாழ்க்கையில் அல்ல, ஐபிஎல் வரலாற்றிலேயே மறக்க இயலாத சம்பவம் நடந்தது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் ஆட்டத்தின் போது இது நடந்தது. ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மிகக் கடுமையான போட்டி நடைபெற்ற போது இந்த நிகழ்வு நடந்தது.

சிஎஸ்கே அணிக்கு 3 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது, நடுவர் உல்ஹாஸ் காண்டே சாண்ட்னர் எதிர்கொண்ட பந்தை “நோ-பால்” என அறிவிக்க முன்வந்து பின்னர் பின்வாங்கியது தோனிக்கு கடும் கோபத்தை வரவழைத்தது. டக்கவுட்டில் அமர்ந்திருந்த தோனி ஆடுகளத்திற்குள் நுழைந்தார். அம்பயரின் மனமாற்றத்தைப் முழுவதுமாக கவனித்த தோனி, கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மற்றொரு ஆன்-பீல்ட் நடுவரான புரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட், தோனியை மீண்டும் டக் அவுட்டுக்குத் திரும்பும்படி சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. இருப்பினும், ஐபிஎல் நடத்தை விதிகளின் லெவல் 2 குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, தோனி தனது போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக செலுத்தினார். ஆனால் இப்போட்டியில் சென்னை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சர்ச்சைகளில் சிக்கிய தோனிக்கு ஜூலை 7 அன்று பிறந்த நாள். அதை சிறப்பிக்கும் விதமாக ஜூலை 1 முதல் புதிய தலைமுறை இணையதளத்தில் தொடர்ச்சியாக கட்டுரை வெளியாகி வருகிறது.

முந்தைய கட்டுரைகள்:

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com