Published : 02,Jul 2022 09:32 PM
மகளுடன் சேர்ந்து மருமகனை கட்டையால் தாக்கிய மாமியார்.. கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்!

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையை கொண்டு தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து ஜிஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய கணவருக்கும் தனக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக மனைவி பிரீத்தா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த பிரீத்தாவின் தாயார் கவிதா மற்றும் உறவினர் செல்வம் பிரவீன்குமார் ஆகியோருடன் சென்று ஈஸ்வரனை விசாரித்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதும் ஈஸ்வரனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கட்டையால் தாக்கியதில் ஈஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சத்தம் போட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கடுமையாக கட்டையால் தாக்கியதை அங்குள்ள நபர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.