Published : 02,Jul 2022 08:23 AM
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி – கணவன் மனைவி கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் வாழைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45) இவரது மனைவி கவிதா (40) ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திண்டுக்கல் சின்ன அய்யங்குளம் பகுதியைச் சேர்ந்த ரீட்டா என்ற பெண்ணிடம் ரூ.6 லட்சம் பணத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாங்கியுள்ளனர்.
ஆனால், பணம் வாங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திரும்பத் தருமாறு ரீட்டா கேட்டுள்ளார். ஆனால், பணத்தை தராமல் முருகானந்தம் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் ரீட்டா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகானந்தம் மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோரை நேற்று கைது செய்தனர், இதையடுத்து இருவரையும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.