Published : 01,Jul 2022 08:23 AM

கோலியின் ஆக்ரோஷத்தை பும்ராவிடம் எதிர்பார்க்கலாமா? இன்று இங்கிலாந்துடன் கடைசி டெஸ்ட்!

England-vs-India-5th-Test-match-preview

ஓராண்டில் இரு அணிகளிலுமே கேப்டன்கள், பயிற்சியாளர்கள் என ஒட்டுமொத்த சூழலே மாறியிருக்கிறது என்பதால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிவாகை சூடப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் 4 டெஸ்டுகளில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி 'டிரா'வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இரு அணிகளிலுமே கேப்டன்கள் மாறி விட்டனர். விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆனால் ரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், இன்றைய டெஸ்டில் களமிறங்குவது கேள்விக்குறியான நிலையில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார்.

image

இந்தியா 2-1 என முன்னிலை வகிப்பதால், இந்த டெஸ்டை 'டிரா' செய்தாலே தொடரை கைப்பற்றிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடைசியாக 2007-இல் ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தொடர் ஒன்றில் 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்றது கிடையாது. எனவே இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் அது புதிய சாதனையாக அமையும்.

அசுர பலம் கொண்ட அணியாக வலம் வரும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து, சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, மூன்றிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.  அதனால் மிகுந்த புத்துணர்ச்சியுடன் வலுவான அணியாக மாறியுள்ள இங்கிலாந்து இப்போட்டியில் அதே அதிரடியுடன் விளையாடி தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்த போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

இந்தியா: சுப்மான் கில், ஹனுமா விஹாரி அல்லது மயங்க் அகர்வால், புஜாரா, ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷர்துல் தாக்குர் அல்லது அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது உமேஷ் யாதவ்.

இங்கிலாந்து: அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மேத்யூ போட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாக் லீச்.

போட்டி நடைபெறும் பர்மிங்காமில் இன்றும் நாளையும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை கூறுகிறது. கடைசி மூன்று நாள் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்