Published : 27,Jun 2022 07:04 AM

'குட்டி மோடி'யாக மாற ஆசைப்படுகிறார் மு.க. ஸ்டாலின் - அண்ணாமலை பேச்சு

Chief-minister-M-K--Stalin-want-to-be-a-Small-Modi---K--Annamalai

"தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு குட்டி மோடியாக மாற ஆசைப்படுகிறார்" என்று மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கே. அண்ணாமலை பேசியதாவது:

இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை மோடி செயல்படுத்தி இருக்கிறார். கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் மேம்பட்டுள்ளது. எந்நேரமும் மக்கள் நலன் குறித்தே அவர் சிந்தித்து வருகிறார்.

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே திமுகவினர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காக வேறு எதையும் அக்கட்சி செய்யவில்லை. இரண்டாது முறையாக அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஆக்க வேண்டும் என பாஜக தெரிவித்த போது, 'கலாம் என்றால் கலகம்' என்று பொருள் எனக் கூறியவர்தான் கருணாநிதி. தற்போது பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்முவின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. உண்மையான சமூகநீதிக்கான கட்சியாக திமுக இருந்தால், திரவுபதி முர்முவை ஆதரிக்க வேண்டும். இப்போதும் அரசியலுக்காக திமுக ஏதாவது காரணம் தேடிக் கொண்டிருக்கும்.

image

குட்டி மோடி...

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து, தானும் 'குட்டி மோடி' ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 'குட்டி மோடி' ஆக வேண்டுமெனில் அடித்தட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும். அதற்கு குடும்பத்தை மறந்து உழைக்க வேண்டும். ஆனால், திமுகவை பொறுத்தவரை 'குடும்பமே கட்சி , கட்சியே குடும்பம்' என்ற நிலைதான் உள்ளது. திமுகவில் எது கட்சி எது குடும்பம் என்று தெரியவில்லை.

ஆபரேஷன் கஞ்சா

சென்னை மாநகர காவல் சங்கர் ஜிவால் 1000 கிலோ கஞ்சாவை தீயில் வீசி அழித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் சென்னை தான் கஞ்சாவின் தலைநகரமாக இருக்கிறது என்று அரசே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறது. மு.க. ஸ்டாலின் ஒரு துணிச்சல் இல்லாத முதல்வராக இருக்கிறார். அதனால்தான், அவரால் கஞ்சா புழக்கத்தை தடுக்க முடியவில்லை. இவ்வாறு கே. அண்ணாமலை பேசினார்.

image

இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேசுகையில், "மு.க.ஸ்டாலின் எப்போதும் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவே இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு தமிழக மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் தரவில்லை. நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. சுய உதவிக் குழுக் கடன் தள்ளுபடி இல்லை. சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சமூகநீதி குறித்து பேச ஸ்டாலினுக்கு அருகதையே இல்லை. ஊழல் நிறைந்ததுதான் திராவிட மாடல். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தும், ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கு கூட பாஜக அமைச்சர்கள் ஆளாகவில்லை" என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்