Published : 25,Jun 2022 02:54 PM
மூளைப் பகுதியில் இருந்த கட்டி வெளிப்புற காயமின்றி அகற்றம் -திருச்சி அரசு மருத்துவமனை சாதனை

மூளைப் பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை செய்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (38). கடந்த ஒரு வருட காலமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு, ரஜினிகாந்த்தின் மூக்கின் வழியாக மூளையின் பிட்டியூட்டரி பகுதியில் இருந்த கட்டியை வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ரஜினிகாந்த் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.