Published : 25,Jun 2022 12:51 PM

எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்

Pattampoochi-Movie-Review-

சுந்தர் சி, ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பட்டாம் பூச்சி. எசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் நவ்நீத் இசையமைப்பில் பட்டாம் பூச்சியை இயக்கியிருக்கிறார் பத்ரி நாராயணன்.

சின்ன வயதில் தன் தந்தையாலேயே கொடுமைகளுக்கு ஆளான ஜெய் ஒருவித உடல், மனக் குறைபாட்டுடன் வளர்கிறார். சைக்கோவாக அவர் செய்யும் தொடர் கொலைகளும் அதன் பின்னே இருக்கும் திடுக்கிட வைக்கும் காரணங்களும் என ஒரு மசாலா கிரைம் கதையாக இது உருவாகியிருக்கிறது. சைக்கோ கொலைகாரன் பட்டாம் பூச்சியுடன் போராடும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி நடித்திருக்கிறார்.

image

80 களில் நடப்பது போன்ற கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார்கள். டெக்னாலஜியின் சாத்தியங்கள் இல்லாமல் விசாரணை நடப்பதற்காக பீரியட் படம் என நினைத்திருக்கலாம். ஆனால் இந்த ஐடியாவே படத்தை பழையபடம் பார்க்கும் உணர்வைத் தந்துவிடுகிறது. படத்தின் டைட்டில் கார்டில் குறிப்பிட்டிருப்பது போல கொடூர கொலைகள் திரையெங்கும் நிகழ்கிறது. ஒரு கதையாக இது ஓகே. ஆனால் திரைக்கதையில் முழுக்க முழுக்க லாஜிக் மீறல்கள். இமான் அண்ணாச்சி கொலைகாரனிடமிருந்து தப்பிக்க வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாண்டடாக போய் மாட்டிக் கொள்கிறார்.

முதல் பாதியில் பட்டாம் பூச்சியின் கொலைகளுக்கு ஒரு நியாயம் சொல்லப்படுகிறது. அதே நேரம் இரண்டாம் பாதியில் பட்டாம் பூச்சி சுந்தர் சி’யை பழிவாங்க அலைகிறார். உண்மையில் சுந்தர் சி’க்கும் சைக்கோ கொலைகாரனுக்கும் எந்த தனிப்பட்ட விரோதங்களும் இல்லை.

image

ஜெய்க்கு இது வித்யாசமான கதாபாத்திரம். முடிந்த வரை முயன்றிருக்கிறார். ஆனால் இன்னும் நிறைய ஸ்கோர் செய்திருக்கலாம். சுந்தர் சி செட்டில்டாக தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்திருக்கிறார். ஹனி ரோஸின் க்யூட்டான சிரிப்பும் குட்டி குட்டி ரியாக்சன்களும் அழகு.

இயக்குநர் 80களில் நடக்கும் கதை என்பதால் காட்சிகளையும் அந்த காலகட்டத்தில் வந்த சினிமாக்களை போல யோசித்திருப்பார்போல. ஒரு மரண தண்டனைக் கைதியை அசால்ட்டாக மருத்துவமனையில் இருந்து தப்பச் செய்வது, வழியில் பைக்கில் சிலர் வந்து தாக்குவது போன்ற ஐடியாக்கள் எல்லாம் முரளி, ராம்கி காலத்து காட்சிகள். போலவே காவல் துறை அதிகாரிகள் பேசும் வசனங்கள் எல்லாம் அத்தனை செயற்கை. அரங்கில் ரசிகர்களே சில இடங்களில் சிரித்து கேலி செய்கிறார்கள்.

image

80ஸ் கால கட்டத்திற்கு ஏற்ற ஒளி அமைப்பை உருவாக்கியதில் ஒளிப்பதிவாளர் எசக்கி கிருஷ்ணசாமி மிளிர்கிறார். பாராட்டுகள். நவ்நீத்தின் இசையும் படத்திற்கு பலமே. பட்டாம் பூச்சி நல்ல கதைக் களம் உள்ள சினிமா. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அருமையான கிரைம் சினிமாவாக இது ஹிட் அடித்திருக்கும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்