
கூடலூர் அருகே ஊருக்குள் வந்த காட்டு யானையை சீண்டிய நபர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது சேரங்கோடு, படச்சேரி பகுதி. இந்த பகுதிக்குள் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் ஒற்றை யானை ஒன்று வந்திருக்கிறது. யானை குடியிருப்புகள் வழியாக நடந்துசென்ற நிலையில் அங்கு வசிப்பவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டி உள்ளனர். அந்நேரம் அப்பகுதியைச் சேர்ந்த அகஸ்டியன் என்பவர் நடைபாதையில் நடந்துசென்ற காட்டு யானை மீது கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்.
கோபமடைந்த யானை திரும்பி அந்த நபரை விரட்டி இருக்கிறது. அவரை மிக அருகில் நெருங்கிய யானை அதிர்ஷ்டவசமாக ஒன்றும் செய்யாமல் விட்டிருக்கிறது. யானை மீது கற்களை எறிந்த நபரை தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருந்தும் யானை அப்படியே அவரை விட்டுச் சென்றிருக்கிறது. யானை அருகில் வந்தும் கூட அந்த நபர் எந்த அச்சமும் இன்றி அதனை விரட்ட முற்பட்டிருக்கிறார்.
இந்த காட்சியை அப்பகுதியில் உள்ளவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி உள்ள நிலையில் யானையிடம் அத்துமீறிய நபருக்கு கண்டனங்கள் வலுத்து இருக்கிறது.