Published : 21,Jun 2022 06:45 PM
'கலகமில்லா எங்கள் ஒற்றை தலைமையே' – விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

’கலகமில்லா எங்கள் ஒற்றை தலைமையே’ என குறிப்பிட்டு மதுரை மன்ற விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.
நடிகர் விஜய் நாளை தனது 48-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதனை அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பலவிதமான போஸ்டர்களையும் அடித்து விஜய் பிறந்தநாளையொட்டி தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை வடக்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதிமுக ஒற்றைத் தலைமை அரசியலை முன்வைத்து போஸ்டரை அடித்துள்ளனர்.
அதில், 'கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே' என்ற வாசகத்துடன் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது ஒற்றைத் தலைமைக்கு எதிராக உள்ள ஓபிஎஸ்ஸை சீண்டும் விதமாக பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.
அதேபோல் பொதுக்குழு இல்லை போட்டியில்லை என்றும் எங்கள் நிரந்தர தலைமையே வணங்கி வாழ்த்துகிறோம் என விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை பற்றவைத்துள்ளது.