3 மாதங்களுக்கு ஒருமுறை அதிமுக சட்டத்தை மாற்ற முடியாது - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

3 மாதங்களுக்கு ஒருமுறை அதிமுக சட்டத்தை மாற்ற முடியாது - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
3 மாதங்களுக்கு ஒருமுறை அதிமுக சட்டத்தை மாற்ற முடியாது - கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி

அதிமுகவின் சட்ட திருத்ததை 3 மாதங்களுக்கு ஒருமுறையெல்லாம் மாற்றிக்கொண்டு இருக்க முடியாது என எம். ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை நடத்த வேண்டும் என்ற முழக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை வேண்டும் என்பதில்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் ஆறாவது நாளாக இரு தலைவர்களும் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தங்களது வீடுகளில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இரு தலைவர்களிடையும் சுமூகமான சூழலை ஏற்படுத்த தூதுக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். மூத்த நிர்வாகிகளான தம்பிதுரை, செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை ஆலோசனை நடத்தினர். சுமார் அரை மணி நேர
ஆலோசனைக்கு பிறகு அவர்கள், அருகில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தூதுக்
குழுவினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இன்பதுரை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஆலந்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.என்.பி வெங்கட்ராமன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், எம். பி. தர்மர் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

பின்னர் இன்பதுரை பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து, எம். ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இவர்கள் நினைக்கும் போதெல்லாம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதிமுகவின் சட்ட திருத்ததை மாற்றி கொண்டு இருக்க முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தேர்வு செய்யபட்டு அதனை தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை தான் கொடுத்துள்ளார்.

சபாநாயகர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்த ஜெயக்குமார் கூறியதை இன்பதுரை தவறு என கூறுகிறாரா?. இதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் செய்வதெல்லாம் பார்த்தால் நீதிமன்றத்திற்கு இது செல்லும் என்றுதான் தோன்றுகிறது. ஓபிஎஸ் நீதிமன்றதிற்கு செல்கிறாரா என எனக்கு தெரியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலகங்காதரன் ஆகியோரும் ஓபிஎஸ் இல்லத்துக்கு வருகை தந்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com