Published : 17,Jun 2022 11:07 PM

வேகத்தில் மிரட்டிய அவேஷ் கான்.. 87 ரன்னில் சுருண்டு தென்னாப்ரிக்கா படுதோல்வி!

India-vs-South-Africa-4th-T20I-India-won-by-82-runs

4-வது டி20 ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா அணி 87 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்ற நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

image

இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு  169 ரன்கள் சேர்த்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் (9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்) விளாசினர். ஹர்திக் பாண்டியா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

image

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 100 ரன்களை கூட நெருங்க முடியாமல் 16.5 ஓவர்களில் வெறும் 87 ரன்னில் சரண் அடைந்தது. ரஸ்ஸி வான் டெர் டுசென் (20 ரன்), குயின்டன் டி காக் (14 ரன்), மார்கோ ஜான்சன் (12 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதன் மூலம் இந்தியா 82  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அவேஷ் கான் 4 ஓவர்களில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20  தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்று சமநிலையில் உள்ளன. அதனால், கடைசி போட்டிக்கு பரபரப்பு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதால் இந்திய அணி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். 

தென்னாப்ரிக்க அணி அடைந்துள்ள மிகப்பெரிய தோல்வி இது. டி20 போட்டிகளில் ஒரு அணிக்கு எதிரான அந்த அணி எடுத்துள்ள குறைவான ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2020ல் 89 ரன்கள் எடுத்ததே குறைவான ஸ்கோராக இருந்து வந்தது. அதேபோல் தென்னாரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அடைந்துள்ள அதிக ரன்கள் வித்தியாசத்திலான மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்