Published : 12,Jun 2022 10:37 AM
`சிதம்பரம் கோயிலில் விசாரணை... அக்கறையுள்ளோர் கருத்து தெரிவிக்கலாம்’- அறநிலையத்துறை தகவல்

சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து தங்களது கருத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல், சிதம்பரம் நடராஜர் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீட்சதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2014 முதல் இந்நாள்வரை கோயிலின் வரவு செலவு கணக்குகள் என்ன, நகைகள் - கோயில் சொத்துக்கள் என்ன என்பது குறித்து கோயில் நிர்வாகம் கணக்கு காண்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை சமீபத்தில் கேட்டது. அதற்காக கடந்த ஏழு மற்றும் எட்டாம் தேதி இந்து சமய அறநிலைத்துறை குழு கோயிலுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படி இரண்டு நாள் கோயிலுக்குள் கணக்கு வழக்குகளை பார்க்க சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, தீட்சிதர்கள் வரவேற்பளித்து விபூதி கொடுத்து, சாமி தரிசனம் செய்ய வைத்து பட்டாடை போர்த்தி கௌரவித்தனர். ஆனால் கோயில் சம்பந்தமான எந்த விதமான கணக்குகளையும் அவர்கள் காண்பிக்க மறுத்துவிட்டனர். கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விருந்தினரை போல அவர்களை மரியாதையுடன் நடத்தினர்.
தொடர்புடைய செய்தி: `விசாரணை குழுவுக்கு ஒத்துழைக்கவும்’-சிதம்பரம் கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை ஆணை
மேலும் கணக்குகளை காண்பிக்க மறுத்து, கணக்குகளை காண்பிப்பது `உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது’ என வழக்கறிஞர் மூலமாக தகவல் தெரிவித்தனர். அதற்கு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், `நாங்கள் பூஜைகளில் தலையிட வரவில்லை. ஆனால் இந்து சமய அறநிலைத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கோயிலில் கணக்குகள் குறித்து தான் கேட்கிறோம்’ என சட்டத்தை எடுத்துரைத்தனர். ஆனால் அதற்கு தீட்சிதர்கள் தரப்பில் `எங்களுக்கு இது பொருந்தாது’ என கோயில் தரப்பில் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இரண்டு நாள் காத்திருந்த அவர்கள், கடந்த எட்டாம் தேதி மாலை `கோயில் நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை’ என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை பொது அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி “கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33 ன் படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம், கோயில் நலனில் அக்கறையுள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். வரும் 20 மற்றும் 21 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை `எண் 8, ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர்’ என்ற முகவரியிலுள்ள இணை ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று விசாரணைக்குழுவின் துணை ஆணையர் / ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்” என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட புகைப்படத்தில் மின்னஞ்சல் முகவரி, கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.