Published : 13,Sep 2017 11:45 AM
விஜயின் மெர்சல் ரசிகர்கள் வெளியிட்ட அனிமேஷன் டீசர்

நடிகர் விஜயின் ரசிகர்கள் பக்கா மாஸ் என்னும் அனிமேஷன் டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் மெர்சல் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற மெர்சல் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ, விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் எனத் தெரிவித்து இருந்தார்.
படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயலதிகாரி ஹேமா ருக்மணி அவ்வப்போது ‘மெர்சல் டீசர் விரைவில் வெளியிடப்படும்’ என ட்விட்டரில் அறிவித்து வருகிறார். ஆனால், வெகு நாட்களாகியும் டீசர் வெளியாகாததால், விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்தில் நடித்த விஜய் புகைப்படங்களை கொண்டு, மீம்ஸ், போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், மெர்சல் பட கேரக்டரையொத்த உருவத்தில் விஜய் தோன்றி ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கும் அனிமேஷன் காட்சிகள் அடங்கிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 29 நொடிகள் ஓடக்கூடிய அந்த டீசருக்கு பக்கா மாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர். அந்த டீசர் சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.