Published : 05,Jun 2022 08:36 AM
வேதாரண்யம்: வளர்ப்பு நாய்களுக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த குடும்பத்தினர்

வேதாரண்யம் அருகே கர்ப்பமாக இருந்த வளர்ப்பு நாய்களுக்கு தம்பதியர் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்த நிகழ்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் கோபி - பிரியா தம்பதிகள். இவர்கள் தாங்கள் வளர்த்து வந்த செல்ல நாய்களுக்கு உறவினர்கள் ஒன்றுகூடி வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்ப்பம் தரிக்காமல் இருந்த பப்பி மற்றும் டைகர் ஆகிய வளர்ப்பு நாய்கள் கடந்த 45 நாட்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தது. இதில் மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதிகள் பெற்ற மகளுக்கு பிறந்த வீட்டில் சீமந்தம் நடத்துவதுபோல தாங்கள் வளர்த்து வந்த செல்ல பிராணியான நாய்களுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்து வீட்டிலேயே செல்ல நாய்களுக்கு வளைகாப்பு நடத்தினர். உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ முறைப்படி வளைகாப்பு விழா நடத்தி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.