ஓய்வடைந்த ‘உயிரின் உயிரே’; கேகேவின் உடல் தகனம் - கண்ணீருடன் வழியனுப்பிய குடும்பத்தினர்

ஓய்வடைந்த ‘உயிரின் உயிரே’; கேகேவின் உடல் தகனம் - கண்ணீருடன் வழியனுப்பிய குடும்பத்தினர்
ஓய்வடைந்த ‘உயிரின் உயிரே’; கேகேவின் உடல் தகனம் - கண்ணீருடன் வழியனுப்பிய குடும்பத்தினர்

பாடகர் கே.கே.வின் உடல், மும்பையில் உள்ள வெர்சோவா இந்து மைதானத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

பாடகர் கே.கே. என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி ஒடியா, மராத்தி, அசாம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவரது தனித்துவமான குரலுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. 53 வயதான இவர், நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நஸ்ரூல் மஞ்சாவில் உள்ள கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு அதிகளவிலான வெப்பத்தால் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக, வெகுநேரமாக வியர்த்துக் கொட்டிய வண்ணம் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் தான் பாடிக்கொண்டிருந்த மேடையில் அசௌகரியமாக உணர்ந்த கே.கே., உடனடியாக ரசிகர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மேடையை விட்டு தனது உதவியாளர்களின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் தனது ஓட்டல் அறைக்கு திரும்பிய அவர், இதயம் பாரமாக இருப்பதாக கூறிய சில நொடிகளிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து இரவு 10.30 மணியளவில், கொல்கத்தா சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு கே.கே. கொண்டு செல்லப்பட்டநிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு கே.கே.வின் உடல், நேற்று காலை உடற்கூராய்வு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் கொல்கத்தா ரபீந்திர சடன் என்ற இடத்திற்கு கே.கே.வின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இறுதி மரியாதை செலுத்தினார்.

பின்னர், மாலை 5.15-க்கு கே.கே.வின் உடலுடன் அவரது குடும்பத்தினர் புறப்பட்டு தனி விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மும்பை வந்தடைந்தனர். மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு கே.கே.வின் உடலுக்கு ஜாவித் அக்தர், ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் கே.கே.வின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வெர்சோவா இந்து தகனம் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கே.கே.வின் உடலுக்கு அவரது மகன் நகுல் இறுதிச் சடங்குகளை, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மேற்கொண்டார். இதற்கிடையில் கே.கே.வின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததால் இயற்கைக்கு மாறான மரணம் என்று நியூ மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

மேலும் இறப்பிற்கு முன்னதாக இசை நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியத்தில், ஏசி குறைவாக இருந்ததாகவும், கண்களை கூசும் அளவிற்கான லைட் வெளிச்சம் இருந்ததாக கே.கே., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதித்த அளவை விட கட்டுக்கடங்காத கூட்ட நெருக்கடி ஆடிட்டோரியத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், உடற்கூராய்வு பரிசோதனை முடிந்து 72 மணி நேரத்தில், பரிசோதனை அறிக்கை வந்தப் பின்னரே கே.கே.வின் மரணத்திற்கு உண்மையான காரணம் தெரியவரும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com