Published : 01,Jun 2022 08:38 PM

பாடகர் கே.கே மரணம்: ரசிகர்கள் முன்வைக்கும் பகீர் புகார்

-Sweating-profusely----Fans-complaint-on-management-and-reasons-for-Singer-KK-heart-attack

அனைவராலும் கேகே என்று அன்பாக அழைக்கப்படுகிற பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு 10.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 53 வயதான கே.கே கொல்கத்தாவில் நஸ்ருல் மான்ச்சில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடிவிட்டு அறைக்கு சென்றபோது அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார். இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்புவரை தான் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அவரது இறப்புக்கு பிறகு பாடல் நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக இசை நிகழ்ச்சி நடைபெற்ற அந்த அரங்கம் திறந்தவெளியில் அமையவில்லை. மேலும் அங்கு ஏசி வேலைசெய்யவில்லை என்றும், அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்ந்ததால் கே.கே தொடர்ந்து ஏசியை ஆன் செய்ய வலியுறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மூடப்பட்ட அரங்கத்தில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஏசியை இயக்குவது மிகமிக அவசியம். இல்லாவிட்டால் வெப்பப் பக்கவாதம் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படும். இது வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும். நிகழ்ச்சி முடிந்தபிறகு வியர்க்க விறுவிறுக்க கே.கே நடந்துசெல்லும் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அவர் கூட்டநெரிசல் குறித்தும், கே.கே. தொடர்ந்து ஏசியை ஆன்செய்ய கூறியும், நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்பது குறித்தும் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

image

'மாரடைப்பு இயற்கையானது அல்ல'

இசை நிகழ்ச்சியில் கூட்டம் அளவுக்கு அதிகமானது குறித்தும், கே.கே ஏசியை ஆன் செய்யச்சொல்லி பலமுறை கோரிக்கை விடுத்தது குறித்தும் ஒரு ரசிகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’’நஸ்ருல் மான்சாவில் ஏசி வேலை செய்யவில்லை. நேற்று அங்கு அவர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்ததால் அதுகுறித்து புகாரும் தெரிவித்தார். மேலும் அது திறந்தவெளி அரங்கமும் அல்ல; அதிக பணம் செலுத்தி ஒரு இடத்தை பதிவுசெய்யும்போது அங்குள்ள அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதையாவது அவர்கள் உறுதிசெய்யவேண்டும். அந்த வீடியோவை நன்கு கவனித்தால் தெரியும். அவருக்கு எப்படி வியர்க்கிறது? அவர் தொடர்ந்து எப்படி துடைத்துக்கொண்டே இருக்கிறார் என்று. அவர் தொடர்ந்து ஏசியை ஆன் செய்ய கேட்டுக்கொண்டே இருந்தது மட்டுமின்றி சில லைட்டுகளையாவது அணைக்கச்சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார்.

மக்கள நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு பாஸ் இல்லாமலே உள்ளே நுழைந்தவண்ணம் இருந்தனர். அப்போதும் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பாதுகாவலர்கள் எங்கே சென்றார்கள்? கொல்கத்தாவின் வெப்பநிலையை கருத்தில்கொள்ளுங்கள். அவ்வளவு கூட்டநெரிசலுக்கு மத்தியில் ஏசியும் வேலைசெய்யவில்லை; அதன் நடுவே குரலை உயர்த்தி பாடினால் நிலைமை என்னவாகும்? அந்த மாரடைப்பு சாதரணமாக நடந்தது அல்ல; நான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

image

தற்போது மொத்த நாடே வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதீத வெப்பம் ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன், இதயத்துடிப்பின் வேகத்தையும் அதிகரிக்கும். இது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும். இதனால்தான் பகல்நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்கச்சொல்லி நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தீயணைப்பானால் மூச்சுத்திணறல்

கே.கேவிற்கு ஹிஸ்டோடாக்ஸிக் ஹைபோக்ஸியா அல்லது மூச்சுத்திணறலால்கூட மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் ரசிகர்கள். பார்வையாளர்கள் நிரம்பிவழிந்த அந்த அரங்கத்திற்குள் சிலர் தீயணைப்பானை அடித்ததாகவும், மேலும் பலர் நுழைவுச்சீட்டு இன்றி உள்ளே வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் டிக்கெட் எடுத்தவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது எனவும் குறிப்பிடுகின்றனர். நிரம்பி வழியும் கூட்டத்திற்கு மத்தியில் தீயணைப்பானை அடித்தால் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி உயிரையே எடுத்துவிடும். இது கே.கேவிற்கு கண்டிப்பாக மூச்சுத்திணறலை ஏற்படுத்தி இருக்கும் என்கின்றனர்.

மேலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிர்வாகத்திடமும் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, அளவுக்கு அதிகமாக வியர்த்துக்கொண்டிருந்த அவர் பார்க்கும்போதே அசௌகர்யமாக காணப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல் ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்றது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/health-news/sweating-profusely-fans-share-startling-details-about-the-concert-after-which-kk-died-of-heart-attack/articleshow/91933321.cms

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்