Published : 26,May 2022 10:00 AM

புல்லரிக்க வைத்த சதம்; ஆர்சிபியை எலிமினேட்டர் கண்டத்திலிருந்து காப்பாற்றிய ரஜத் பட்டிதர்!

RCB-IPL-2022-Rajath-Patidhar-Century-in-eliminator-match-against-Lukcknow

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி ராஜஸ்தானுக்கு எதிரான தகுதிச்சுற்றிற்கு முன்னேறியிருக்கிறது.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் ரஜத் பட்டிதரே. அவர் அடித்த அதிரடியான சதத்தால்தான் பெங்களூரு அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தது. 200 ரன்களுக்கு மேல் எடுத்ததால்தான் பெங்களூரு அணியால் டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடிந்தது. ஆக, பெங்களூருவின் வெற்றிக்கான மூலக்காரணம் ரஜத் பட்டிதரே.

இந்த எலிமினேட்டரை பொறுத்தவரைக்கும் ரஜத் பட்டிதர் ஒரு அவுட் ஆஃப் சிலபஸ் வீரர்தான். யாருமே அவர் இந்த அடி அடிப்பார், ஆட்டத்தையே புரட்டி போடுவார் என எதிர்பார்க்கவே இல்லை. கடந்த சீசன்களில் பெங்களூருவிற்காக ஆடியிருந்தாலும் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் சீண்டப்படாமல் விற்கப்படாத வீரராகவே இருந்தார். பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்து வைத்திருந்த லவ்னித் சிசோடியா எனும் இளம் வீரர் காயம் காரணமாக ஆட முடியாமல் போக, தொடர் ஆரம்பித்து ஒரு வாரம் கழித்தே ரஜத் பட்டிதர் ரீப்ளேஸ்மெண்டாக வந்து இணைந்தார். இரண்டாம் பாதி சீசனில்தான் ப்ளேயிங் லெவனிலேயே இடம் கிடைத்திருந்தது. குஜராத்துக்கு எதிரான போட்டியில் மட்டும் அரைசதம் அடித்திருந்தார். கோலி, டூப்ளெஸ்சிஸ், மேக்ஸ்வெல் என ஸ்டார்கள் நிரம்பிய பெங்களூரு அணியில் அவர்களுக்கு ஒத்துழைத்து செகண்ட் ஃபிடிலாக ஆடும் வீரராகவே ரஜத் பட்டிதர் பார்க்கப்பட்டார். ஆனால், இந்த எலிமினேட்டரில் கதையே வேறு. ரஜத் பட்டிதர்தான் இங்கே ஹீரோவாகவே இருந்தார்.

image

டூப்ளெஸ்சிஸ் முதல் ஓவரிலேயே அவுட் ஆகியிருந்தார். கோலி 24 பந்துகளில் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பரபரவென உள்ளே வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் ஒரு சிக்சரை மட்டுமே அடித்து 9 ரன்களிலேயே வெளியேறிவிட்டார். அணியின் முக்கியமான மூன்று ஸ்டார் வீரர்களும் இணைந்து எடுத்த ஸ்கோர் வெறும் 34 தான். பயங்கரமான சொதப்பல்! இந்த மூன்று பேரில் ஒருவர் கூட நிற்காமல் பெங்களூரு 200+ ஸ்கோரை எட்டும் என இரண்டு நாட்களுக்கு முன்பு யாராவது கூறியிருந்தால், அது வாய்ப்பே இல்லாத ஒரு அசாதாரண விஷயமாகவே பார்க்கப்பட்டிருக்கும். ஆனால், நேற்று அந்த அசாதாரணத்தைதான் பட்டிதர் நிகழ்த்தியிருந்தார்.

'அழுத்தமிக்க இந்த ப்ளே ஆஃப்ஸ் சூழலும் அவரை பயமுறுத்தவில்லை. எதிரணியும் அவரை பயமுறுத்தவில்லை. ரொம்பவே இலகுவாக மிகச்சிறப்பான ஒரு இன்னிங்ஸை பட்டிதர் ஆடியிருக்கிறார்' என ரவிசாஸ்திரி புகழ்ந்திருந்தார். மிகைப்படுத்துதலே இல்லாத பாராட்டு இது. ஏனெனில், தொடக்கத்திலிருந்தே அணியின் தேவையை உணர்ந்து தேவைப்பட்ட நேரங்களில் அதிரடியாக ஆடி ரன்ரேட்டை எங்கேயும் கீழே விழாமல் பார்த்துக் கொண்டு சீராக ஸ்கோரை முன்னேற்றிக் கொண்டே இருந்தார்.

image

டூப்ளெஸ்சிஸ் அவுட் ஆன பிறகு முதல் 4 ஓவர்கள் பவர்ப்ளேயில் பெங்களூரு அணி 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரன்ரேட் சரியாக 6 மட்டுமே. கொல்கத்தா பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது. முந்தைய இரவில் ராஜஸ்தான் அணி 188 ரன்களை எடுத்தும் டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியவில்லை. இப்படியான சூழலில் டாஸை தோற்று முதலில் பேட்டிங் செய்கிறோம் எனில் குறைந்தபட்சமாக 200+ ஸ்கோரையாவது எடுக்க வேண்டும். அதற்கு, ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருக்கும் பவர்ப்ளேயை முழுமையாக அதிரடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், முதல் 4 ஓவர்களில் பெங்களூரு அதை செய்திருக்கவில்லை. இன்னும் 2 ஓவர்களே மிஞ்சியிருக்கும் சூழலில் பெங்களூரு அணி அந்த இரண்டு ஓவர்களிலும் எவ்வளவு அதிக ரன்களை அடிக்க முடியுமோ அவ்வளவை அடிக்க வேண்டும் என்கிற தேவை எழுந்திருந்தது. அணிக்கு தேவையான இந்த சமயத்தில் ரஜத் பட்டிதர் சரியாக பேட்டை வீசினார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 28 ரன்கள் வந்திருந்தது. பட்டிதர் பவுண்டரியும் சிக்சருமாக அடித்து வெளுத்திருந்தார். க்ரூணால் பாண்ட்யா வீசிய 6 வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் அடித்திருந்தார்.

பவர்ப்ளே முடிந்து மிடில் ஓவர்களில் பெங்களூரு கொஞ்சம் மெதுவாக ஆடிய சமயத்திலும் பெரிய வீழ்ச்சி எதுவும் ஏற்படாதபடிக்கு ஓவருக்கு எல்லைக்கோட்டை தாண்டிய ஷாட் என்கிற வகையில் நன்றாகவே ஆடிக்கொண்டிருந்தார்.

image

கடைசிக்கட்டங்களில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 37 ரன்களை அடித்திருந்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த துரிதமான பயனுள்ள ஆட்டத்திலும் ரஜத் பட்டிதரின் பங்கும் இருக்கவே செய்கிறது. தினேஷ் கார்த்திக் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவ்வளவு திடகாத்திரமான வீரர் கிடையாது. அதுவும் அவர் க்ரீஸூக்குள் வரும்போதே ஸ்பின்னர் வீசிக்கொண்டிருந்தால் கடுமையாக திணறுவார். செட்டில் ஆக முடியாமல் சீக்கிரமே அவுட்டும் ஆகிவிடுவார். நேற்று தினேஷ் கார்த்திக் உள்ளே வந்த சமயத்திலும் இதுதான் நடந்திருந்தது. ரவிபிஷ்னோய் அப்போது பந்துவீசிக்கொண்டிருந்தார். அவரின் முதல் 3 பந்துகளை எதிர்கொள்வதற்குள்ளேயே தினேஷ் கார்த்திக் திக்கு முக்காடிவிட்டார். ஒரு பந்தை பேடில் வாங்க, அதற்கு லக்னோ ரிவியூவ் எல்லாம் போய் அம்பயர்ஸ் கால் என வந்து தினேஷ் கார்த்திக் தப்பியிருப்பார். ஒரு வழியாக எதிர்கொண்ட நான்காவது பந்தில் சிங்கிள் தட்டியிருப்பார். பிஷ்னோயிக்கு இன்னும் ஒரு ஓவர் இருக்கிறதே அதை தினேஷ் கார்த்திக் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் எனும் சந்தேகம் எழுந்த சமயத்தில்தான் ரஜத் பட்டிதர் முன்னே வந்தார். தினேஷ் கார்த்திக் முதல் பந்திலேயே சிங்கிள் தட்டிவிட, அடுத்த 5 பந்துகளையும் பட்டிதரே எதிர்கொண்டார். உங்களுக்கு ஸ்ட்ரைக் வரக்கூடாது அவ்வளவுதானே எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன் எனும் தொனியில் தினேஷ் கார்த்திக்கை ஒரு முனையில் நிறுத்திவிட்டு பிஷ்னோயின் பந்துகளை பிறுத்தெடுத்தார். அந்த 5 பந்துகளில் மட்டும் 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிக்களோடு 26 ரன்களை சேர்த்திருந்தார். இந்த ஓவரை தினேஷ் கார்த்திக் கடந்து விட அடுத்தடுத்த ஓவர்களில் அவரும் கதகளி ஆடினார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் இவர்களின் ஆட்டத்தால் 84 ரன்கள் வந்திருந்தது.

ரவிபிஷ்னோயிக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஸ்பின்னர்களுக்கு எதிராகவே பட்டிதர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். 54 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்தவர், ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டும் 22 பந்துகளில் 58 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 263.

'பட்டிதரின் ஆட்டத்தையும் அதற்கான ரசிகர்களின் ஆரவாரத்தையும் பார்த்த போது அப்படியே புல்லரித்துவிட்டது' என மைதானத்திலிருந்து கமெண்ட்ரி செய்து கொண்டிருந்த Graeme Smith பேசியிருந்தார்.

மைதானத்திலிருந்தவர்களுக்கு மட்டுமல்ல; தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்குமே புல்லரித்துதான் போயிருந்தது. அப்படி ஒரு வெறித்தனமான ஆட்டம் இது. ஒற்றை ஆளாக பெங்களூருவை எலிமினேட்டரிலிருந்து தகுதிச்சுற்றுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கேயும் பட்டிதரின் அதிரடிகளும் சாகசங்களும் தொடர வேண்டும். மீண்டும் மீண்டும் புல்லரிக்க செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

-உ.ஸ்ரீராம்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்