Published : 24,May 2022 08:05 AM

``நீட் விலக்கு சட்டப்போராட்டம் தொடர்ந்தாலும், பயிற்சியையும் அரசு கைவிடலை” - அமைச்சர்

Minister-Anbil-Mahesh-says-Despite-the-legal-battle-over-the-NEET-exemption--the-government-has-not-given-up-on-exam-training

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லேனா விலக்கில் லெம்பலகுடி இலங்கை மறுவாழ்வு முகாமில் முன்னாள் மாணவர்கள் பேரவையின் கல்வி மற்றும் பல்துறை பயிற்சி மைய திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி மற்றும் பல்துறை பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

அப்போது இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதை கைதட்டி ரசித்து பார்த்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற மாணவி ஈழத்தில் நடைபெற்ற துயரத்தையும் குடியிருமை கிடைக்காமல் அவதி அடைவதையும் பாடல் மூலமாகவும் பேசியும் எடுத்துக் கூறியதை கேட்டு கண் கலங்கினார்.

image

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளனர், அந்த கோரிக்கையின்படி உயர்கல்வித்துறை அமைச்சர் தமிழக முதலமைச்சருடன கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, கடந்த கூட்டத்தொடரில் 314 கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சர் ஒதுக்கினார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இலங்கையில் இருக்கக்கூடிய பிரச்சனையை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு ‌123 கோடி ரூபாயை அனுப்பி வைத்து அங்கு உள்ள தமிழர்கள் என்று சொல்லாமல் இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

image

திமுக அரசுக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும், அவ்வளவு ஏன்... வாக்கு உரிமையே இல்லை என்றாலும் அவர்களையும் நாம் பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. உண்மையில் அவர்களுக்கே அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும் என்பதே முதலமைச்சரின் உத்தரவு. தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்.

தேர்வு எழுதும் மாணவர்கள் பதட்டமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். `எதுவாக இருந்தாலும் உங்களை பாதுகாக்க நானும், அரசும் உள்ளோம்’ என்று தமிழக முதலமைச்சர் ஏற்கெனவே கூறியிருந்தார். அதனை மையப்படுத்தி தான் `நான் முதல்வன்’ திட்டமெல்லாம் உருவாக்கப்பட்டது. ஆகவே அனைவரும் நம்பிக்கையோடு இருக்கலாம்” என்றார்.

image

தொடர்ந்து மானவர்களுக்கான அறிவுரைகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இங்கு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட திறமை இருக்கும். பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு மற்றொரு குழந்தையை ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனி திறமை இருக்கும். அதை கண்டறியும் கடமையும் பொறுப்பும் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு எப்படி உள்ளதோ அதேபோல் அரசாங்கத்திற்கும் அத்துறை சார்ந்தோருக்கும் பொறுப்பு உள்ளது. இந்த கோடைக்காலம், மாணவர்கள் சுயத்தை கண்டுபிடிக்க உதவும் காலகட்டமாக இருக்கும்.

கோடை விடுமுறையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் உள்ள சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக கணினி வகுப்பு, நீச்சல், ஓவியம் உள்ளிட்டவற்றுக்கு சென்று நல்ல வகையில் பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும். பெற்றோர்களும் `பள்ளி விடுமுறை விட்டாச்சு. நாம் சொல்வதைதான் குழந்தைகள் கேட்க வேண்டும்’ என்று வேலை வாங்க எண்ணக்கூடாது.‌ குழந்தைகளுக்கு உள்ள தனித் திறமைகளை கண்டறியும் காலமாக இந்த காலத்தை செலவிடுங்கள்.

image

பள்ளிகளில் தேர்வு முடிந்த மாணவர்கள் விடுமுறை காலங்களில் வெயிலில் அதிகமாக சுற்றக்கூடாது. நீர்நிலைகள் இருக்கும் பகுதியில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியத்துடன் மாணவர்கள் எந்த விஷயத்திலும் இருந்துக்கொள்ளக் கூடாது.

இதையும் படிங்க...தேர்தலில் சிறப்பான பணி... திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு 1 பவுன் மோதிரம் வழங்கிய அமைச்சர்

நீட் தேர்வை பொருத்தவரை தமிழக முதலமைச்சர் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கனவே ஜனாதிபதி வரை செல்லாத நீட் எதிர்ப்பு மசோதா தற்போது தமிழக முதல்வரின் அழுத்தத்தால், ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வு நடைபெறும் என்று இருப்பின் தங்களது துறை சார்பாக அந்தந்த பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு தான் வருகிறது. அவையாவும் குழந்தைகளை எந்த வகையிலும் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. நீட் விலக்கிற்காக சட்டப்போராட்டம் நடத்தி, அதில் வெற்றி பெறுவோம் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

image

ஆன்லைனில் பாடம் கற்கும் மாணவர்களுக்கு இடையூறாக வரும் விளம்பரக் காட்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதே வயதின் அடிப்படையில் வைத்து தான் ஒவ்வொரு செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னும் அதில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளோம். ஆகவே பெற்றோர் கவலை கொள்ள வேண்டும்.

தற்பொழுது பள்ளிக்கூடங்கள் முழுமையாக நேரடியாக செயல்பட தொடங்கியுள்ளது என்பதால், வரக்கூடிய கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் வரும்பொழுது இந்த ஆன்லைன் வகுப்பு படிப்படியாக குறைந்துவிடும். அப்படியே நடந்தாலும், ஆன்லைன் வகுப்பு என்பது கட்டாயம் கிடையாது” என்று தெரிவித்தார்.