Published : 23,May 2022 01:59 PM
உ.பி: பாஜக ஆட்சிக்கு பின் சாலைகளில் தொழுகை நடத்துவது இல்லை: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரமலான் பண்டிகையையொட்டி சாலையில் தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், " உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் வன்முறை இல்லை. உத்தரப் பிரதேசத்தில் ரமலான் மற்றும் அல்விதா ஜும்ஆ (ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமை) அன்று சாலையில் நமாஸ் நடத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் முசாபர்நகர், மீரட், மொராதாபாத் மற்றும் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. மாதக்கணக்கில் ஊரடங்குச் சட்டம் இருந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,“எங்கள் அரசு மாநிலத்தில் உள்ள சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடியுள்ளது. மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கோசாலைகளை கட்டியுள்ளோம். மத ஸ்தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகளையும் அகற்றியுள்ளோம். எங்கள் அரசாங்கம் 700 க்கும் மேற்பட்ட மத இடங்களை புனரமைத்துள்ளது” என்று கூறினார்.