Published : 23,May 2022 08:44 AM

`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு

Vismaya-case-verdict-today--prosecution-pins-hopes-on-pre-death-call-recordings

நாட்டையே உலுக்கிய கேரளாவை சேர்ந்த விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

100 சவரன் நகை - ஒரு ஏக்கர் நிலம் - விலையுயர்ந்த கார்... இது அத்தனையும் கொடுத்த பிறகும், `இந்த வரதட்சணை எனக்கு பத்தாது’ எனக் கூறி, கூடுதல் பொருட்கள் கேட்டு வரதட்சணைக் கொடுமை செய்ததால் கொல்லத்தைச் சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார். விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவத்தின் இறுதி ஆண்டு மாணவியென்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கணவர் கிரண் குமார், கேரள போக்குவரத்து துறையில் துணை மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்தார். விஸ்மயா - கிரண் தம்பதியிடையே திருமணம் நடைபெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே விஸ்மயாவின் உயிர் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

Young-woman-committed-suicide-after-husband-abused-her-in-Kollam

திருமணத்தின்போது தனக்கு கொடுத்த கார் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பணத்தை வாங்கி வரும்படி கூறியும் விஸ்மயாவை கிரண் துன்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையிலேயே மதுபோதையில் இருந்த கிரண் அவரை மிகவும் மோசமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ந்து போன விஸ்மயாவின் தந்தை திருவிக்ரமன், காவல்நிலையத்தில் அந்த நேரத்தில் புகார் அளித்திருந்திருக்கிறார். ஆனால் காவல்நிலையத்தில் நடவடிக்கைக்கு பதில், சமாதான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. விஸ்மயா மீண்டும் கிரண் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிரண் வீட்டில் இருந்த விஸ்மயா தனது உறவினருக்கு வாட்ஸ் ஆப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், தன்னை கிரண் அடித்துத் துன்புறுத்துவதாகவும், தனது முடியை இழுத்து தாக்கியதாகவும், இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

image

இந்த வாட்ஸ் ஆப் உரையாடல் நிகழ்ந்த இரு தினங்களிலேயே கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் விஸ்மயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வரதட்சணைக் கொடுமையினாலேயே தனது மகளைக் கொலை செய்திருப்பதாக விஸ்மயாவின் பெற்றோர் அப்போது மீண்டும் புகார் தெரிவித்தனர். அதற்கான ஆதாரமாக வாட்ஸ் ஆப் பதிவுகளையும் கொடுத்துள்ளனர். அப்போதுதான் கேரள மகளிர் ஆணையமும் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து முறையாக வழக்குப் பதிவு செய்தது.

Raise-in-case-of-newly-wed-bride-deaths-in-Kerala

இதையடுத்து கிரணை காவல்துறையினர் கைது செய்தனர். விஸ்மயாவை தான் அடித்துத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட அவர், இருவரும் சண்டை போட்ட பின்னர், விஸ்மயா தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 60 ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் கூட 100 சவரன் நகை கொடுத்து பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் வெகு இயல்பாக அங்கு நடந்திருப்பது, நாட்டையே உலுக்கியது.

தொடர்புடைய செய்தி: கடவுளின் தேசத்தில் அதிகரிக்கும் புதுமணப்பெண்களின் மரணங்கள்

இதுபோன்ற வழக்கங்கள், இந்தியா முழுவதுமே பல இடங்களில் உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது. விஸ்மயா மரணத்தின்போது, அந்த சம்பவத்தைத் தொடர்ந்து வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்க 24 மணி நேர ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

image

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்த இந்த வழக்கில், கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வெளியிடவுள்ளது. இதனிடையே தான் கணவர் வீட்டில் இனி இருந்தால் தன்னை இனி யாரும் பார்க்க முடியாது எனக்கூறி விஸ்மயா கண்ணீருடன் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி, அதுவும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த ஆடியோவில் அவர், “என்னை இங்கே வாழ வைத்தால், நீங்கள் என்னை மீண்டும் பார்க்க மாட்டீங்க ப்பா. நான் ஏதாவது செய்துகொள்வேன். என்னால் இதற்கு மேல் எதையும் தாங்க முடியாது. நான் உங்களிடமே திரும்பி வரேன் ப்பா. எனக்கு இங்க பயமாருக்கு. இவங்க என்னை அடிப்பாங்க” என்று அழுதுகொண்டே தன் தந்தையிடம் பேசியுள்ளார். இந்த ஆடியோவும் தற்போது கூடுதல் சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்