Published : 21,May 2022 10:14 PM

இளைஞர்களிடம் சமூக உணர்வு, சிந்தனைகள் குறைந்து வருவதே நீட் வரக்காரணம் - பொன்முடி பேச்சு

Minister-Ponmudi-said--that-the-social-feeling-and-thoughts-of-the-youth-are-declining-is-the-reason-for-NEET

இளைஞர்களிடம் சமூக உணர்வு மற்றும் சிந்தனைகள் குறைந்து வருவதே நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் உள்ளே வருவதற்கு காரணம் எனவும், எல்லா மொழியும் ஒன்றுதான் என்றால் யுஜிசி கொண்டு வந்துள்ள நுழைவுத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இருப்பது ஏன்? என்றும் அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். 

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின், 56வது கல்லூரி தினவிழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியபோது, "தமிழகத்தில் ஒருகாலத்தில், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே கல்வி பயிலலாம் என்று நிலையை மாற்றி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே திட்டமிட்டு, கிறிஸ்தவ மடாலாயங்கள் தான் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வழிவகை செய்தன.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சி பெற காரணமாக இருந்தது கிறிஸ்தவ மடாலயங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. திராவிட மாடலை அன்றைய காலத்தில் இருந்து செயல்படுத்தி வருவது கிறிஸ்தவ மடாலயங்கள். இது அரசியல் அல்ல; வரலாறு. கடந்த, 1965ஆம் ஆண்டுகளில் மாணவர்களிடம் எழுந்த எழுச்சிதான் இந்தி மொழி திணிக்கப்படாமல், கட்டாயப் படுத்தப்படாமல் இருப்பதற்கு காரணம். தற்போது இளைஞர்களிடம் சமுதாய உணர்வு இல்லாமல் போய்விட்டது. வெறும் புத்தகப் புழுவாக இல்லாமல், சமுதாய உணர்வு, சமூக சிந்தனை கொண்டவர்களாக மாணவர்கள், இளைஞர்கள் மாற வேண்டும்.

நீட் போன்ற தேர்வுகள் தேவையில்லை என்பதை உணர வேண்டும். மாணவர்கள் வரலாற்றை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த எண்ணங்கள் இருக்க வேண்டும். இப்பொழுது இளைஞர்களிடம் இந்த உணர்வு குறைந்து வருகிறது. இத்தகைய நிலையால்தான் நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வுகள் தமிழகத்தில் உள்ளே வர காரணம்" என்றார்.

image

அதைத்தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியபோது, "மத்திய அரசு பல்கலை மானியக்குழு தற்போது ஒரு தேர்வை கொண்டு வந்துள்ளனர், அதில் கூட ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டும்தான் எழுத முடியும் என்று கூறுகிறார்கள். எல்லா மொழியும் ஒன்றுதான் என்றால், எதற்கு இரண்டு மொழி மட்டும் வைத்திருக்கிறார்கள்? எல்லா மொழியும் இருப்பதில் எங்களுக்கோ அல்லது தமிழக முதல்வருக்கு எந்த வேறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால், ஹிந்தி மொழி திணிப்பிற்கு தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதில் உள்ள தேவையில்லாத சிலவற்றை நீக்கிவிட்டு நாங்கள் மாநில கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறு வகுப்போம். அவர்கள் மூன்றாவது, எட்டாவது வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று சொல்கிறார்கள். அதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது" என்றார்.

"திமுக என்பது வெங்காயம் மாதிரி. உரிக்க, உரிக்க அதில் ஒன்றும் இருக்காது" என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே.." என்ற கேள்விக்கு, "இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா.. அண்ணாமலைன்னு...." என்று சொல்லியபடியே கிளம்பிச் சென்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்