வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்

வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்

இந்த ஆட்டத்தின் முடிவுக்காக டெல்லி மட்டுமின்றி ஆர்சிபி அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 69-வது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 3 வெற்றி, 10 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் ரேஸில் இருந்து ஏற்கனவே வெளியேறியுள்ள மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற கடுமையாக போராடும். மேலும், அடுத்த ஐபிஎல் சீசனுக்காவது அணியை வலுப்படுத்தும் வகையில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்க மும்பை வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் டெல்லி அணியுடன் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் மும்பை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. எனவே இந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்த வேண்டும் என்றால் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் மும்பை இந்தியன்ஸ் ஒருங்கிணைந்து ஆடவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

மறுபுறம், டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 5ஆம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி அணிக்கு வாழ்வா சாவா போராட்டம் ஆகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளை எட்டுவதுடன் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனெனில் ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை விட டெல்லி அணியின் ரன் ரேட்  உயர்வாக இருக்கிறது. மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் நடையை கட்ட வேண்டியதுதான். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் அதிர்ஷ்டம் அடிக்கும்.

முந்தைய இரு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் டெல்லி இன்று களமிறங்குகிறது. பேட்டிங்கில் டேவிட் வார்னர் (427 ரன்கள்), ரிஷப் பண்ட் (301 ரன்கள்), மிட்செல் மார்ஷ் உள்ளிட்டோர் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் (20 விக்கெட்டுகள்) கலீல் அகமது (16 விக்கெட்டுகள்), ஷர்துல் தாக்கூர் பலம் சேர்க்கின்றனர்.   

இந்த ஆட்டத்தின் முடிவுக்காக டெல்லி மட்டுமின்றி ஆர்சிபி அணியின் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

மும்பை இந்தியன்ஸ்: 1.ரோஹித் சர்மா (கேப்டன்), 2.இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 3.திலக் வர்மா, 4.ராமன்தீப் சிங், 5.டிரிஸ்டன் ஸ்டப்ஸ், 6.டிம் டேவிட், 7.டேனியல் சாம்ஸ், 8.சஞ்சய் யாதவ், 9.ஜஸ்பிரித் பும்ரா, 10.ரிலே மெரிடித், 11.முருகன் அஷ்வின்/மயங்க் மார்கண்டே

டெல்லி கேபிடல்ஸ்: 1.டேவிட் வார்னர், 2.சர்பராஸ் கான், 3.மிட்செல் மார்ஷ், 4.ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 5.லலித் யாதவ், 6.ரோவ்மன் பவல், 7.அக்சர் படேல், 8.ஷர்துல் தாக்கூர், 9.குல்தீப் யாதவ், 10.அன்ரிச் நார்ட்ஜே, 11.கலீல் அகமது

இதையும் படிக்கலாம்: தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com