Published : 21,May 2022 07:08 AM

தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்

Rajasthan-Royals-VS-Chennai-Super-Kings-RR-Won-by-5-Wickets

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் சென்னை அணிக்கு இது 10வது தோல்வி. இதுவரை விளையாடியுள்ள ஐபிஎல் சீசன்களிலே சிஎஸ்கேவுக்கு இதுதான் மோசமாக சீசன். மோசமான விமர்சனங்களுக்கு ஆளான 2020 தொடரிலும் 6 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. அதுவும் கடைசி 3 போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. ஒரு நம்பிக்கையுடன் சிஎஸ்கே அப்போது வெளியேறியது. ஆனால், நடப்பு சீசனில் கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வி.

image

தோனிதான் காரணமா?

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் மொயின் அணி அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எளிதில் வெற்றி பெறமுடியவில்லை. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் தான் போராடி வெற்றி பெற்றது. சென்னை அணி இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். 6 ஓவர்களில் 75 ரன்களை விளாசிய சென்னை அணி அடுத்த 14 ஓவர்களில் மொத்தமாக 75 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு முக்கியமாக காரணம் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்ததுதான். கான்வே, ஜெகதீஸன், ராயுடு மூவரும் 10 ரன்களுக்குள் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் ஓவரிலேயே கெய்க்வாட் ஆட்டமிழந்த போதும் அடுத்து களமிறங்கிய மொயின் அலி மறுமுனையில் கான்வேவை நிற்கவைத்துக் கொண்டே வாணவேடிக்கை காட்டி வந்தார். ஆனால், இந்த விக்கெட் வீழ்ச்சியால் அந்த அதிரடி அப்படியே தடைபட்டு போனது.

image

இது ஒருபுறம் இருக்க தோனியின் நிதானமான ஆட்டமும் மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஆம், 10.2 ஆவது ஓவரில் ராயுடு ஆட்டமிழந்த போது தோனி களமிறங்கினார். 11வது ஓவரில் இருந்து 19வது ஓவரின் இறுதி பந்து வரை அவர் ஆடினார். மொத்தம் 28 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 26 ரன்களையே எடுத்தார். தான் சந்தித்த பந்துகளை விட குறைவான ரன்கள். தொடக்கத்தில் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க தடுப்பாட்டத்தை ஆடியது சரியே. 15 ஆவது ஓவர் வரை நிதானமாக ஆடியதை ஒப்புக் கொள்ளலாம். அதன்பிறகு அவர் விளையாடிய கடைசி 5 ஓவர்களிலும் பெரிய அளவில் ரன் எடுக்கவே இல்லை. ஒரே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். இதனால், 200 ரன்கள் குவிக்கும் என தொடக்கத்தில் இருந்த எதிர்பார்ப்பு புஷ்வானமாக மாறி 170 ரன்னை கூட எட்டாமல் 150 ரன் மட்டுமே சிஎஸ்கே எடுத்தது.

ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சு இதற்கு காரணம் என்றாலும் சென்னை வீரர்களின் மோசமான பேட்டிங்கும் ஒரு முக்கியமான காரணம். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஒட்டுமொத்த அணியும் திணறிக் கொண்டிருந்த போது, ஒற்றை ஆளாக பேட்டிங்கில் அசத்தினார் தோனி. ஆனால், பல போட்டிகளில் ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுகிறார்.

image

சிஎஸ்கேவின் வெற்றியை தட்டிப் பறித்த அஸ்வின்:

பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தார் அஸ்வின். பந்துவீச்சில் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதுவும் ஆட்டத்திற்கு திருப்பு முனையாக அமைந்த விக்கெட். முதல் ஓவரில் முதல் விக்கெட் வீழ்ந்தாலும் கான்வே - மொயின் அலி ஜோடியை பிரிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி திணறி வந்தது. அந்த நேரத்தில் கான்வே விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். மொயின் அலியைப் போல் கான்வேவும் அதிரடியில் இறங்கி இருந்தால் நேற்று சென்னை அணியின் நிலையே வேறாக இருந்திருக்கும். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஸ்வின். பேட்டிங்கிலும், ஜெய்ஸ்வாலை தவிர மற்ற ராஜஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். 112 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஹெட்மயர் உட்பட பெரும்பாலான வீரர்கள் ஆட்டமிழந்துவிட்டனர்.

image

ரியான் பராக்கை வைத்துக் கொண்டு தளி ஆளாக கெத்து காட்டினார் அஸ்வின். தேவையான நேரங்களில் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். கொஞ்சமும் பயம் இல்லாமல் விளையாடினார். 23 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்களை குவித்தார். இதில் மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். உண்மையில் அஸ்வினின் கிளாசிக் பேட்டிங் இது. ஆட்டநாயகன் விருதினையும் அவர் தட்டிச் சென்றார். இந்த தொடர் முழுவதும் அஸ்வின் தனது ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் முத்திரை பதித்து வருகிறார்.

இதையும் படிக்கலாம்: ”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்