Published : 21,May 2022 07:24 AM

கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!

Nellai-quarry-accident-poor-family-sorrowful

காதலித்து கரம் பிடித்த கணவர் கல்குவாரி விபத்தில் உயிரிழக்க, வாழ்க்கையை வாழவே தொடங்காத 23 வயது இளம்பெண். இரவானால் அப்பாவை தேடும் குழந்தைக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் தாய். நெல்லை கல்குவாரி விபத்து ஒரு ஏழைக் குடும்பத்தில் ஏற்படுத்திச் சென்ற ரணத்தை குறித்து விவரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரி விபத்தில் 6 பேர் சிக்கினர். அதில் ஐந்தாவதாக மீட்கப்பட்டவர் டிப்பர் லாரி ஓட்டுநர் செல்வகுமார் (29). இவர் நாங்குநேரி தாலுகாவில் உள்ள காக்கைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். விபத்து நடந்து 4-ஆம் நாள் இரவு சடலமாக மீட்கப்பட்ட செல்வகுமாரின் உடல் தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது சொந்த ஊரான காக்கைகுளம் கிராமத்திற்கு சென்றோம். விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் குக்கிராமம் அது. இங்கு 35 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்திரா காலனி குடியிருப்பில் சில வீடுகள் இடிந்து விட, இப்போதும் இடிந்து விழாமல் 20 வீடுகள் மட்டும் விரிசல் ரேகைகளுடன் இருக்கிறது. அதில் ஒன்று செல்வகுமாரின் வீடு.

image

கடந்த 2018 ம் ஆண்டு செல்வகுமார் தனது அத்தை மகள் சேர்ம கல்யாணியை காதலித்து கரம் பிடித்து உள்ளார். திருமணம் நடந்தது முதல் காக்கை குளம் கிராமத்தில் உள்ள இந்திரா காலனி குடியிருப்பில் உள்ள தனது தாய் வசித்த வீட்டில் மனைவி சேர்ம கல்யாணியுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவசரமாய் நடந்த கிராமத்து காதல் திருமணம் என்பதால், கணவன் மனைவி இருவரும் இணைந்து புகைப்படமோ வீடியோவோ எதுவும் எடுத்து வைக்கவில்லை. காதல் ஜோடிக்கு 2021-ல் மகன் முகேஷ் பிறந்துள்ளான்.

காலனியில் 150 சதுர அடியில் வீடு. வீட்டின் உள்ளே மேலே மின்விசிறி மாட்டக் கூட பலமில்லாத வீடு என்பதால் டேபிள் ஃபேனும், சிறிய அளவிலான அரசு வழங்கிய டிவி மட்டுமே ஆடம்பரமாக வீட்டை அலங்கரித்துள்ளன. மழை பெய்தால் ஒழுகும் இந்த வீட்டில், காதல் மனைவி நனையாமல் இருப்பதற்காக வயர் கட்டில் வாங்கி கொடுத்துள்ளார் செல்வகுமார். விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள இந்த கிராமத்தில் இளைஞர்கள், தனக்கு குடும்பம் என்று ஆனவுடன் கிடைத்த வேலைக்கு, குறிப்பாக எங்கு சென்றாலும் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் டிரைவர் வேலைக்கே அதிகம் செல்கின்றனர். அப்படி டிரைவர் வேலைக்கு டிப்பர் லாரி ஓட்டுனராக குவாரிக்கு சென்றவர்தான் செல்வகுமார்.

மூன்று வருடங்களாக இந்த நிறுவனத்தில் ஓட்டுனராக இருக்கிறார். காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றால், மறுநாள் காலை 8 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்புவார். இதனால் திரும்பியதும் அன்று முழுவதும் ஓய்வு, பின் மறுநாள் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும. தன் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும், விரிசல் விழுந்து, எந்த நேரமும் இடியலாம் என்ற நிலையில் உள்ள இந்த வீட்டில் இருந்து, சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலைக்கு சென்று வருவார் செல்வகுமார் என்கிறார் மனைவி சேர்ம கல்யாணி. ஒரு தட்டு வீடு! அதற்குள் கணவன், குழந்தை மட்டுமே உலகம் என வாழ்ந்த சேர்ம கல்யாணி இன்று கணவனை இழந்து, அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அழுது கனத்த கண்களுடன் வீட்டில் மயங்கி கிடக்கிறார்.

image

விபத்து நடந்த அன்று சனிக்கிழமை காலை வேலைக்கு செல்லும் போது, வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து கொண்டு, சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இரவில் 11.30 மணியளவில் குவாரியில் விபத்து என அருகில் உள்ளவர்கள் பேசிக்கொண்டிருக்க, உடனடியாக செல்போனில் கணவர் செல்வகுமாரை அழைத்துள்ளார் மனைவி சேர்ம கல்யாணி. ஆனால் செல்வகுமார் போனை எடுக்கவில்லை. அவர் அப்போதே பாறை இடுக்குகளில் சிக்கி இருந்திருக்கிறார். காலையில்தான் விபத்து குறித்த முழு விவரமும் தொலைக்காட்சியின் சேர்ம கல்யாணிக்கு தெரியவந்துள்ளது. அழுதுகொண்டே வீட்டில் இருந்தவர், மறுநாள் வரை கணவரை மீட்பது குறித்த விபரம் எதுவும் தெரிய வராததால், விபத்து நடந்த குவாரிக்கும், ஆட்சியர் அலுவகத்திற்கும் அம்மாவுடன் அழுதுகொண்டே சென்றுள்ளார். ஆனால் எங்கு அலைந்தும் கணவர் குறித்த எந்த விவரமும் தெரியவராததால் மீட்பு பணி நடைபெறுவதை மட்டும் பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

நான்காண்டுகள் காதல் கணவனோடு வாழ்ந்திருந்தும் புகைப்படம் கூட எடுத்து வைத்து கொள்ளாத கிராமத்து குடும்பம். குவாரியில் நான்கு நாள் தேடலுக்கு பிறகு கிடைத்த செல்வகுமாரின் சடலத்தை படம் பிடித்த செல்போனில் பதிவான சிதைந்த முகம் மட்டுமே இப்போது நினைவில் இருக்கிறது. பழைய முகம் மறந்து விட்டது என அதிர்ச்சியில் கூறுகிறார் காதல் மனைவி சேர்ம கல்யாணி. நம்மிடம் பேசுவதற்காக கட்டிலில் அமர்ந்தவர், பேசி முடித்ததும் தரையில் படுத்துக் கொண்டார். காதல் கணவரின் எதிர்பாராத மரணம், மிகப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை அந்த பெண்ணின் செய்கையிலேயே உணர முடிந்தது !

image

பாட்டியும் தாத்தாவும் உடன் இருக்கும் மகிழ்ச்சியில், வீட்டுக்குள்ளேயும், வாசலிலும் துருதுருவென விளையாடிக் கொண்டிருக்கும் ஒன்றரை வயது குழந்தை முகேஷ் இன்னும் தந்தையின் நினைவு வராமல் விளையாடிக் கொண்டிருக்கிறான். இரவானால் தந்தை எங்கே என்று தேடும் அவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கணவனை இழந்து தவிக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கும் அவளை சுற்றியே வரும் ஒன்றரை வயது குழந்தைக்கும் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்ளும் வகையில் இந்த இளம்பெண்ணுக்கு அரசு வேலை ஒன்றை வழங்கி உதவிட வேண்டும் என்கிறார்கள் குடும்பத்தினர்.

நெல்லை நாகராஜன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்