Published : 18,May 2022 09:23 AM

ஐபிஎல்: பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா? - இன்று லக்னோவுடன் மோதல்

Kolkata-Knight-Riders-VS-Lucknow-Super-Giants-today-ipl-match-preview

பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு நவி மும்பையின்  டிஒய் பாட்டில் மைதானத்தில் நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

அறிமுக அணியான லக்னோ இந்த சீசனில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுவிடும். ஒருவேளை  தோல்வி கண்டாலும் அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. லக்னோ அணி தனது முந்தைய இரு லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறது. எனவே வெற்றிப் பாதைக்கு திரும்பவும், பிளே ஆஃப் சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறவும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு உதவிகரமாக இருக்கும்.

image

லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (469 ரன்கள்), தீபக் ஹூடா (406 ரன்கள்), குயின்டாக் டி காக் (362 ரன்கள்) சிறப்பான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அவேஷ் கான் (17 விக்கெட்டுகள்), ஜாசன் ஹோல்டர் (14 விக்கெட்டுகள்), ரவி பிஷ்னோய் (11 விக்கெட்டுகள்) வலுசேர்க்கிறார்கள்.

image

மறுபுறம், கொல்கத்தா அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 6ஆம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (351 ரன்கள்), நிதிஷ் ராணா (319 ரன்கள்) நல்ல ஃபார்மில் உள்ளனர்.  ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் பேட்டிங் (330 ரன்கள்) மற்றும் பந்து வீச்சில் (17 விக்கெட்டுகள்) கலக்கி வருகிறார். அதேபோல் பந்து வீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இரு அணிகளும் இந்த சீசனில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் லக்னோ 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 1. பி இந்திரஜித், 2.வெங்கடேஷ் ஐயர், 3.ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), 4.நிதிஷ் ராணா, 5.சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), 6.ரிங்கு சிங், 7.ஆண்ட்ரே ரசல், 8.சுனில் நரைன், 9.உமேஷ் யாதவ், 10.டிம் சவுதி, 11.வருண் சக்ரவர்த்தி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 1.குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), 2.கே.எல். ராகுல் (கேப்டன்), 3.தீபக் ஹூடா, 4.க்ருனால் பாண்டியா, 5.மார்கஸ் ஸ்டோனிஸ், 6.ஆயுஷ் படோனி, 7.ஜேசன் ஹோல்டர், 8.அவேஷ் கான், 9.மொஹ்சின் கான், 10.ரவி பிஷ்னோனி, 11. துஷ்மந்த சமீர

இதையும் படிக்கலாம்: மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்