நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?

நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?
நட்டத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கிய எல்.ஐ.சி... யார் யாருக்கு எவ்வளவு நட்டம்?

பெரிதும் எதிர்பார்கப்பட்ட எல்.ஐ.சி இன்று வர்த்தகத்தை தொடங்கியது. சந்தையில் ஏற்கெனவே கணிகப்பட்டதை போல முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட விலையை விட குறைவாகவே பட்டியலானது.

ஒரு பங்கு ரூ.949க்கு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 8.6 சதவீதம் குறைந்து 867 ரூபாய்க்கு வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால் குறைந்தபட்ச விலையாக ரூ.860 வரைக்கும் விலை சரிந்தது.

எல்.ஐ.சி. பட்டியலாகும்போது சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு இருந்தது. ஆனால் பட்டியலான பிறகு சுமார் 42,000 கோடி ரூபாய் வரை சந்தை மதிப்பு குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு குறைந்த விலையில் பங்குகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததைவிடவும் குறைவாகவே தற்போது எல்.ஐ.சி. பங்குகள் வர்த்தகமாகின்றன.

பணியாளர்களுக்கு ரூ.904க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலிசிதாரர்களுக்கு ரூ.889க்கு ஒதுக்கப்பட்டது. இதர சிறு முதலீட்டாளர்களுக்கு ரூ.949க்கு வழங்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்புக்குமே எல்.ஐ.சி முதலீடு தற்போது நஷ்டத்தையே வழங்கி இருக்கிறது.

அடுத்து என்ன?

எல்.ஐ.சியின் சந்தை மதிப்பு கவர்ச்சிகரமாகவே இருக்கிறது. இருந்தும் சந்தை சூழ்நிலைகள் சரியில்லாத காரணத்தால் எல்.ஐ.சி. பங்குகள் தள்ளுபடியில் வர்த்தகமாகின்றன. ஏற்கெனவே பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடரலாம். ஒருவேளை ஐபிஓவில் கிடைக்கவில்லை என்றால் புதிதாக முதலீடும் செய்யலாம். எல்.ஐ.சியில் புதிய முதலீட்டுக்கு இது சரியான வாய்ப்பு என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நீண்ட கால முதலீட்டில் பங்குச்சந்தையை அணுகுபவர்களுக்கு இது சரியான தருணம். பங்குகளின் விலை குறைய குறைய, முதலீட்டை மேலும் உயர்த்தலாம். நடப்பு ஆண்டில் நல்ல டிவிடெண்ட் கிடைக்க கூடும் என்றும் சில சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காப்பீடு குறித்து விழிப்புணர்வு தற்போது தொடர்ந்து உயர்ந்துவருகிறது. எல்.ஐ.சி. பெரும்பான்மையான சந்தையை வைத்திருப்பதால் விழிப்புணர்வு உயரும்போது காப்பீடு எடுப்பவர்களின் எண்ணிக்கை உயரும். அது எல்.ஐ.சி.க்கு சாதகமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஐந்தாவது பெரிய நிறுவனம்

பங்குச்சந்தையில் பட்டியலான பிறகு இந்தியாவில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக எல்.ஐ.சி உயர்ந்திருக்கிறது. முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. இரண்டாம் இடத்தில் டிசிஎஸ்-ம், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.

ஐந்தாம் இடத்தில் எல்.ஐசி இருக்கிறது. சுமார் ரூ.5.56 லட்சம் கோடி சந்தை மதிப்பில் வர்த்தகமாகிறது. இதற்கடுத்து ஆறாவது இடத்தில் ஹெச்.யூ.எல். நிறுவனம் இருக்கிறது. எல்.ஐ.சி பங்குகள் மேலும் சரிவை சந்தித்தாலோ அல்லது ஹெச்.யு.எல். பங்கு விலையில் ஏற்றம் இருந்தாலோ ஐந்தாம் இடத்தில் இருக்கும் எல்.ஐ.சி. ஆறாம் இடத்துக்கு தள்ளப்படலாம்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனம் எல்.ஐ.சி. என்னும் கணிப்புகள் இருந்தன. ரிலையன்ஸுக்கு அடுத்து அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கம் காரணமாக சந்தை மதிப்பு குறைந்தது.

அதேபோல முன்பு 5 சதவீத பங்குகளை விலக்கிகொள்ள திட்டமிட்டது. ஆனால் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக 3.5 சதவீத பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. தற்போது அந்த பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com